தந்தையை வெட்டியவரை கொன்ற மகன்
தூத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன்மடம் கீழத்தெருவை சேர்ந்தவர் சம்பத்செல்வகுமார்(வயது 60). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி(60). சம்பத்செல்வகுமாருக்கு சொந்தமான காலி இடத்தில் ஜெயபாண்டிக்கு சொந்தமான கோழிகள் மேய்ந்துள்ளது. இது தொடர்பாக இன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஆத்திரமடைந்த சம்பத்செல்வகுமார் தான் வைத்திருந்த கத்தியால் ஜெயபாண்டியை வெட்டினார்.. அதில் ஜெயபாண்டியின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை பார்த்த ஜெயபாண்டியின் மகன் மாரிச்செல்வம்(36) அரிவாளால் பதிலுக்கு வெட்டியதில் சம்பத்செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த சாயர்புரம் போலீசார், சம்பத்செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







