இளையரசனேந்தல் ரோட்டில் தார்ச்சாலை அமைக்கும்பணி; தரமில்லை என்று கூறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி நகரில் நீண்ட ரோடாக இளையரசனேந்தல் ரோடு விளங்குகிறது. சமீபத்தில் சாலையின் இருபுறமும் வடிகால் அமைக்கப்பட்டது.
ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த இந்த சாலை மேலும் மோசமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகி விட்டது. குண்டும் குழியுமாக மாறி இரு சக்கர வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைத்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் இந்தரோட்டில் பை-பாஸ் பாலம் அருகில் இருந்து திடீரென தார்ச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளபட்டது.
தார்ச்சாலை அமைப்பதற்கு முன்பு சாலையில் பள்ளம் தோண்டி முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் மேலோட்டமாக தார்க்கலவை மூலம் சாலை போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி அறிந்ததும் பா.ஜனதா நகர தலைவர் போலீஸ் சீனிவாசன், கவுன்சிலர் விஜயகுமார், தொழில் பிரிவு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் மாரியப்பன், ஊடகபிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, நகர பா.ஜனதா பொருளாளர் பாலமுருகன், செயலாளர் ராஜன் உள்பட பலர் அங்கு குவிந்தனர்,
அவர்கள் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமற்ற சாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் சாலை அமைக்கும் தற்காலிகமாக நிறுத்த்தப்பட்டது.
போராட்ட குழுவினருடன் நெடுஞ்சாலை அதிகாரிகள் மற்றும் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நாளை(இன்று) பேச்சு வார்த்தை நடத்தியபிறகு தொடரும் என்று தெரிவித்தனர்,
இதை தொடர்ந்து தார்ச்சாலை அமைக்கும் பணி சிறிது தூரத்துடன் நிறுத்தப்பட்டது. அநேகமாக இன்று இந்த பணி இன்று இரவு தொடரும் என்று தெரிகிறது.







