மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாராகும்-கனிமொழி எம்.பி.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று (23/1/2024) சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது.
அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், திமுக விவசாய அணித் தலைவர் ஏ.கே.எஸ்.விஜயன், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.பி.எம்.பி.எழிலரசன், எழிலன் நாகநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் கனிமொழி எம்.பி. பேட்டி அளித்தார், அவர் கூறியதாவது:-
பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டறிய உள்ளோம். முதற்கட்டமாக செல்ல உள்ள இடங்களின் பட்டியல் குறித்து இன்று ஆலோசித்தோம். இந்த பட்டியல் முதல் அமைச்சரிடம் கொடுக்கப்பட்டு அதன்பிறகு இறுதி செய்யபப்டும்.
எங்களின் சுற்றுபயணத்தின் போது அனைத்து தரப்பு மக்கள், தொழில் அதிபர்கள், தொழிற்சங்கத்தினர் என சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாராகும்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.







