செண்பகவல்லி அம்மன் கோவில் உற்சவமூர்த்திகள் வருடாபிஷேக விழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் வளாகத்தில் திருமுறை மன்றம் சாா்பில் 2014ஆம் ஆண்டு 63 நாயன்மாா்கள் மற்றும் மாணிக்கவாசகா் சுவாமிகளுக்கு பஞ்சலோக உற்சவ திருமேனிகள் நிறுவப்பட்டன. இந்த உற்சவ திருமூா்த்திகளின் 10ம் ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை மற்றும் சுவாமி, அம்பாள், உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் , கோயிவில் மண்டபத்தில் காலை 8.30 மணிமுதல் 10 மணிவரை சங்கல்பம், கும்ப ஸ்தாபன பூஜை நடைபெற்றது. பின்னா், 10.30 மணி முதல் 12 மணி வரை 63 நாயன்மாா்கள், தொகையடியாா்கள் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகளின் உற்சவ மூா்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
மதியம் 1 மணிக்கு மாஹேஸ்வர பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு திருமுறை பாராயணம், 5.30 மணிக்கு திருமுகப்பாசுரம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு 63 நாயன்மாா்கள், மாணிக்கவாசகா் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது.விழாவில், திருமுறை மன்றத்தினா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.









