ஆதார் சேவை : துணை அஞ்சலகங்களிலும் ஏற்பாடு
கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர் திருநாள் கொண்டாடப்படும் தை மாதம் முழுவதும் ஆதார் மையம் செயல்படும். அனைத்து அஞ்சலகங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு கவுண்ட்டர் அமைத்து ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழர் திருநாள் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் ‘ஆதார் தை திருவிழா” என்ற பெயரில் துணை அஞ்சலகங்களிலும் மாலை 4 மணி வரை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதிக ஆதார் பதிவு மற்றும் திருத்தம் தேவைப்படும் கிராமங்களில் அந்த கிராமங்களுக்கே சென்று முகாம் அமைத்து சேவைகளை பொதுமக்களின் இருப்பிடத்திற்கே வந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை குறித்த மேலான விவரங்களுக்கு 04632-221013 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம்.
பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகளையும், அதிக வட்டி வீதத்துடன் கூடிய பல்வேறு அஞ்சலக சேமிப்புத் திட்டங்களையும் இந்த தை மாதத்தில் தொடங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சுரேஷ் கூறி உள்ளார்.







