தென் மாவட்டங்களில் பனங்கிழங்கு விளைச்சல் அமோகம்
,தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பரந்து விரிந்து கிடக்கும் தமிழ் மக்கள் அனைவரும் சாதி மதம் வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட தயாராகி வருகின்றனர். வாழையடி வாழைபோல், பனையடி பனையாக நமக்கு பின்னரும் சந்ததியினர் தழைத்தோங்க வேண்டும் என்பதால் தைத்திருநாளில் பனைமரத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும்,பனங்கிழங்கு வழிபாடு முக்கியமானதாக உள்ளது.
தென்மாவட்டங்களில் பனைமரங்கள் இல்லாத கிராமங்களே கிடையாது. பனை மரத்தில் அடி முதல் நுனிவரை அத்தனை பாகங்களும் இயற்கையுடன் ஒன்றி பயனளிக்க கூடியவை. முதலில் பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, தவுன், பனங்குருத்து, அதன் பின் வீடுகளுக்கு கூரை வேயப்பயன்படும் ஓலை, பனைமர விட்டம், என அனைத்தும் பயன்படக்கூடியவை.கடந்த ஆவணி மாதம் பனைமரத்தில் பழுத்து உதிர்ந்த பனம்பழங்களை பிரித்து குறுமணலில் வரிசையாக பரப்பி அதன் மீது மண் போட்டு மூடிவிட்டனர்,
3 மாத மழைக்காலத்தில் மண்ணிற்கடியில் முளைத்து கிழங்காக உருவெடுக்கும். சில பனங்கொட்டைகள் முனையிலிலேயே சுருண்டு காணப்படும். சராசரியாக பத்தாயிரம் கொட்டைகள் போட்டால் அதில் 20 சதவீத கொட்டைகள் பழுது ஏற்படும். கடந்த காலங்களில் மழை சராசரியை விட குறைவாக பெய்ததால் கிழங்கு திரட்சியின்றி காணப்பட்டது.
இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறியதாவது:-
பெருமழை காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்குஇந்தாண்டு பனங்கிழங்கு திரட்சியாக உள்ளது. நிலத்தில் ஊன்றப்பட்ட கொட்டைகள் எவ்வித பாதிப்புமின்றி கிழங்காகி உள்ளது. இதனால் இந்தாண்டு எங்கு காணினும் பனங்கிழங்கு வரத்து அதிகமாக உள்ளது. இதனால் கடந்த காலங்களில் பனைத்தொழிலாளர்களிடம் ரூபாய் 4 க்கு கொள்முதல் செய்து 8ரூபாய் வரை வியாபாரிகள் விற்றனர்.
இந்தாண்டு வரத்து அதிகமானதால் 3 ரூபாய்க்கு மொத்த கொள்முதல் செய்து 5 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இந்தாண்டு பனை மரங்களில் பதநீர் தரும் பாலை முன்கூட்டியே தென்படுகிறது.
வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தவுடன் பனைத்தொழில் சூடு பிடிக்கும். இருப்பினும் பனைத்தொழில் கஷ்டமானது என்பதாலும், ஆண்டு முழுவதும் இத்தொழில் செய்ய முடியாது, லாபகரமான தொழில் இன்றி சொற்ப லாபமே இருப்பதால் பனைத்தொழில் புரிவோர் பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களே உள்ளனர். இளைய தலைமுறையினரும் இத்தொழில் புரிய முன்வர வேண்டும். பனைத்தொழில் செய்வோரை அரசு ஊக்கப்படுத்திஉதவிகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்







