கோவில்பட்டியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் ; அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆர்த்தி மஹாலில் இன்று அரசுத் துறைகளின் சேவைகள் பொதுமக்களுக்கு இன்னும் எளிதாகவும், விரைவாகவும் சென்றடைய வேண்டுமென்ற நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் முகாம் நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளி பயனாளிக்கு அங்கீகார சான்றிதழை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, கோவில்பட்டி வட்டத்தில் மழை வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்த 11 நபர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1,10,000 நிவாரணத் தொகை வழங்கினார்.
கால்நடைகளை இழந்த 2 நபர்களுக்கு ரூ.48000 வழங்கினார்.
இம்முகாமில், கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் கா.கருணாநிதி, வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், நகராட்சி ஆணையாளர் கமலா, வட்டாட்சியர் லெனின், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.







