தற்காலிக டிரைவர் இயக்கிய கோவில்பட்டி பஸ், விபத்தில் சிக்கியது
அருகில் விளாத்திகுளத்தில் இருந்த சித்தவன்நாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, வேலிடுபட்டி, சிங்கிலி பட்டி, பேரிலோவன்பட்டி வழியாக கோவில்பட்டிக்கு செல்லும் அரசு பஸ் இன்று காலை புறப்பட்டது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தினால் விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் நிரந்தர ஓட்டுநர் இருந்தும் தற்காலிக ஓட்டுநர் சுப்பிரமணி இந்த பஸ்சை இயக்கினார்.
இந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்தனர். இந்த பஸ், சிங்கிலிபட்டி வந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவசர அவசரமாக பஸ் சில் இருந்து கீழே இறங்கினார்கள். பல மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறிது நேரத்துக்கு பிறகு அந்த பஸ் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டது. பின்னர் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.







