பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் தொண்டர்கள் அஞ்சலி; கோவில்பட்டி சோதனைசாவடியில் போலீஸ் குவிப்பு
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் 12-வது நினைவு தினம் இன்று (10.1.2024) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி வட்டம், மேலஅலங்காரத்தட்டு கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் தொண்டர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வேன், கார்களில் குவிந்து வருகிறார்கள்.வெளியூர் வாகனங்கள் கோவில்பட்டி வழியாக கடந்து சென்றன. தொண்டர்கள் காரில் இருந்தபடி கோஷம் எழுப்பியபடி செல்கிறார்கள்.
கோவில்பட்டியில் முக்கிய சந்திப்பு பகுதியான இளையரசனேந்தல் சாலை சோதனை சாவடியில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி தலைமையில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜென்சி மேற்பார்வையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர், மேலும் சிறப்பு அதிரடி போலீசாரும் ஒரு வேனில் இருந்தனர்.

சோதனை சாவடியை கடந்து சென்ற வாகனங்களை கண்காணித்தனர். கோஷம் எழுப்ப்பியபடி வந்தவர்களின் கார்களை நிறுத்தி ஏதாவது ஆயுதங்களை மறைத்து வைத்து இருக்கிறார்களா என்று சோதனை நடத்தப்பட்டது. காலை 7.30 மணியில் இருந்து இந்த சோதனை நீடித்தது.
மேலும் இன்றைய தினம் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள 75 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் கலெக்டர் லட்சுமிபதி உத்தரவின் பேரில் மூடப்பட்டு இருந்தான,.
மேலும் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ் நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி ஏற்கனவேவிடுத்து உள்ளார்.







