மழை எச்சரிக்கை: தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், அரியலூர், பெரம்பலூர். திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை தூத்துக்குடி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இந்நிலையில் 9 மணிக்கு தொடங்கிய மிதமான மழை பரவலாக 2 மணி நேரம் பெய்தது. ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. பிறகு மழை நின்று மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கியது.
இதே போல் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் காலை நேரத்தில் சாரல் மழையும் பிறகு சிறிது நேரம் கனத்த மழையும் பெய்தது. தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதாலும், இன்றும் (9.01.2024) நாளையும் (10.1.2024) கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் மழைபெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாத்து ஓடை கரையோர பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் லட்சுமிபதி கூறி இருக்கிறார்.







