கோவில்பட்டி-கிளவிபட்டி அரசு பஸ்சை மீண்டும் இயக்ககோரி சாலை மறியல்
கோவில்பட்டியில் இருந்து கிளவிபட்டி கிராமத்திற்கு தினமும் காலை, மாலை என 4 தடவை அரசு பஸ் இயக்கப்பட்டது. மேலும் மினி பஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதிப்பு சமயத்தில் அரசு பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 17ந்தேதியில் இருந்து கோவில்பட்டியில் இருந்து கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அக்கிராம மக்கள், தொழிலாளர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த கிராம மக்கள் கோவில்பட்டி வந்து செல்வது தவிர்க்கமுடியாதது. இதனால் மீண்டும் பஸ்களை இயக்க வேண்டும் என்று\ பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று காலை என்பதால் கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினார்கள. கிளவிபட்டி கிராமத்தில் இருந்து திரண்டு வந்த மக்கள் கோவில்பட்டி – பசுவந்தனை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக இருவழியிலும் போக்குவரத்து பாதிக்கபட்டது. பஸ்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பேச்சு நடத்தி கூட்டத்தினரை சமாதானப்படுத்தினார்கள். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேசி ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதை தொடர்ந்து வெகு நேரம் கழித்து மறியல் கைவிடப்பட்டது.







