கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மலர் காவடி விழா
பிரசித்தி பெற்ற குடவரை கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மலர் காவடி விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மலர் காவடி விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
வேளாங்குறிச்சி ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூர் ஆதீனம் 25-வது குருமகா சந்நிதானங்கள் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவைகவுமார மடாலயம், தமிழ்நாடு முருக பக்தர்கள் பேரவை மாநில சிறப்பு தலைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், மானாமதுரை ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் சுவாமி மாதாஜி, சுவாமி ஆத்மானந்தா, ஆகியோர் அருளுரை வழங்கினர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் இருந்து மலர் காவடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதில், குழந்தைகள் முதல் பெரியோர் வரை 1008 பேர் மலர் காவடிகள் எடுத்து மலையை கிரிவலமாக சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தனர்
.பின்னர் கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அர்ச்சனையும், மலர் காவடியில் கொண்டு வரப்பட்ட பூக்களால் புஷ்பாஞ்சலியும் நடந்தது. விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மகேஷ்வர பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.