மழை வெள்ளமும் , மீட்பு படகும்… (சிறுகதை)

 மழை வெள்ளமும் , மீட்பு படகும்… (சிறுகதை)

மழை..சோ.. என்று பெய்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் மழையின் வேகம் அதிகரித்தது.தெருக்களில் தண்ணீர் பெருகி ஓடியது. சாதாரண மழை என்று எல்லோரும் நினைக்க நேரமாக நேரமாக மழை நீடித்துக்கொண்டிருந்தது.

இரவு ..நெருங்க..நெருங்க..இடியுடன் மழை கொட்ட..இன்னும் சிறிது நேரத்தில் மழை நின்றுவிடும் என்று  நினைத்த நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரே இருட்டு..வழக்கம் போல் சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிடும் என்று காத்திருக்க..மின்சாரம் வரவில்லை.

 என்னாச்சு..கரண்டு வரலை..எங்கேயும் டிரான்ஸ்பார்மர் வெடிச்சுட்டா..? பலரும் பலவிதமாக பேச..வீடுகளில் மெழுகுவர்த்திகள் மின்னத் தொடங்கின.

இந்த கரண்டு போனா உடனே வராதப்பா..என்று சிலர் முணுமுணுக்க..மழை எக்ஸ்பிரஸ் வேகத்தில் பெய்ய ஆரம்பித்தது.

மழை காலம்..இப்படித்தான் பெய்யும்..ஒண்ணும் செய்யமுடியாது..மழை பெய்யாட்டி மழை பெய்யலங்கிறோம்..பெஞ்சா..இப்படி பெய்யுது என்கிறோம் என்று முதியவர் ஒருவர் முணுமுணுத்தார்.

அது விவசாயிகள் நிறைந்த பகுதி..பல மழைகளை பார்த்தவர்கள்.ஆனால் இப்போது பெய்யும் மழை வித்தியாசமாக இருக்க..என்ன இப்படி கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது என்று யோசித்தார்கள்.

போன கரண்டும்..வரல..புயலும் ஒண்ணும் இல்ல..பின்னே ஏன் பேய் மழை பெய்யுது என்று கன்னத்தில் விரல் வைத்தனர்.

மணி பத்தை நெருங்கியது..மழை நிற்பது போல் இருந்தது.அப்பாடா..மழை நின்னுட்டு என்று பெருமூச்சு விட்ட நேரத்தில் மின்சாரம் வந்துவந்து போனது..ஏல..லைட்டை அணை..லைட்டை அணை..பியூஸ் போயிடும்  என்று வீட்டு பெரியவர் கத்த… மின் விளக்குகள் ஆப் செய்யப்பட்டன.
ம்…இனி மழை பெய்யாது..நிம்மதி என்று அனைவரும் கதவை பூட்டிவிட்டு படுக்கத் தயாரானார்கள்.எங்கும் இருட்டு..மின்சாரம் முற்றிலுமாக நின்றது.

12 மணி..மீண்டும் மழை…தட தட என்ற சத்தத்துடன் தண்ணீர் பெருகி ஓடியது.வீட்டில் தூங்கியவர்கள் மறுபடியும் மழை பெய்ததை கவனிக்க வில்லை.ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள்.

மணி 2..மழை நிற்கவில்லை.அப்போதுதான்..அந்த சத்தம்..அணையிலே நீர்மட்டம் கூடிட்டாம்..திறந்துவிடப்போறாங்க..ஊருக்குள்ளே வெள்ளம் வந்திரும்..வீட்டை விட்டு வெளியேறுங்க..என்று கதவை தட்டி ஒரு வாலிபர் சொல்ல..ஊரே பரபரப்பானது.

கிளம்புங்க..கிளம்புங்க..என்று அதிகாரிகள் அவசரப்படுத்த..மக்களை ஏற்றிச்செல்ல வேன் தயாராக இருந்தது.ஆடு மாடுகளை விட்டு விட்டு பிள்ளைகளை தூக்கிக்கொண்டு வேனில் மக்கள் ஏறினார்கள்.

வேன் விரைந்தது.மேடான பகுதியில் உள்ள திருமண மண்டபம்..மக்கள் நிரம்பினர்..வெள்ளம் வருதாம்..வெள்ளம் வருதாம்..என்று பலரும் பதட்டமாக இருந்தனர்

அந்த ஊரில்..பெரிய பணக்காரர்..மாளிகை வீடு..மூன்று மாடி..செல்வ செழிப்பு..மழை பெய்த போது  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.மக்களோடு அதிக தொடர்பு இல்லை…மாடி வீடு.பெரிது..தண்ணியெல்லாம் உள்ளே வராது என்ற எண்ணத்தில் இருக்க..விடிந்தது.கதவை திறக்க முயன்றார்.முடியவில்லை.

இரண்டாவது மாடிக்கு சென்று பார்த்தார்.வீட்டை சுற்றி வெள்ளம்..முதல் மாடி வரை மூழ்கியிருக்க பதட்டமானார்.

மின்சாரம் இல்லை.இன்வெட்டர் உதவியால்..இரு விளக்குகள் மின்னின.போன் ..எப்போது வேண்டுமானாலும் இயங்க மறுக்கலாம் என்ற நிலை.அதிகாரிகளிடம் தழுதழுத்த குரலில் தொடர்பு கொள்ள..அவரது குடும்பத்தினர்..கண்களில் உயிர் பயம்….

.சிறிது நேரத்தில் இரண்டு படகுகள்..அவரது வீட்டை நோக்கி விரைந்தது.கறுத்த தேகத்துடன் மழையில் நனைந்தபடி வந்த இரண்டு வாலிபர்கள்..பணக்காரரை பார்த்து..வாங்க..சீக்கிரம் வாங்க..நீர் மட்டம் கூடிக்கிட்டே இரூக்கு..படகில் வந்து ஏறுங்க என்றனர்.

பணக்காரர் தன் மனைவி மற்றும் மக்களுடன்..பதட்டமாக..எட்டிப்பார்த்தார். ஏழைகள் என்று மட்டமாக நினைத்தவர்கள் ஆபத்தில் காப்பாற்ற வந்த கடவுளாக நினைத்தார்.அவர்கள் கை நீட்ட..பணக்காரர் தன் மனைவியையும் மகளையும் ஒரு படகில் ஏற்றினார்.அடுத்த படகில்..அவர் ஏறும் போது தடுமாறி கீழே விழ..வெள்ளம் அவரை சூழ்ந்தது.
அந்த இளைஞன்  கண் இமைக்கும் நேரத்தில் குதித்து அவரது தலை முடியை பிடித்து காப்பாற்றி படகில் ஏற்றி கரைக்கு விரைந்து கொண்டிருந்தான்.

ஏழை ,பணக்காரர் என்று யாரையும் வேறுபாடு பார்ப்பதில்லை வெள்ளம். எல்லா உயிரும் ஒன்றுதான் சார் என்று அந்த வாலிபர் சொன்ன வார்த்தை பணக்காரரை  உலுக்கியது.அவரை  கரைக்கு கொண்டு சென்று சேர்த்த வாலிபர் ..பத்திரமா இருங்க சார்..நீர் மட்டம் அதிகமாக இருக்கு..கல்யாண மண்டபத்திலே இருங்க என்று சொல்லிவிட்டு..வேறு ஒருவரை மீட்க படகில் விரைந்தார்.

உலகில் யாருமே மட்டம் இல்லை..என்று நினைத்தபடி பணக்காரர்..அந்த மீட்பு மையமாக செயல்பட்ட அந்த திருமண மண்டபத்துக்குள் தடுமாறியபடி நடந்து சென்றார்…!

வே.தபசுக்குமார், முள்ளன்விளை- தூத்துக்குடி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *