தூத்துக்குடி மாவட்ட புதிய கூடுதல் கலெக்டராக ஐஸ்வர்யா பதவி ஏற்றார்
தூத்துக்குடி மாவட்ட புதிய கூடுதல் கலெக்டராக (ஊரக வளர்ச்சி முகமை) ஐஸ்வர்யா ராமநாதன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
சிறு வயதில் இருந்து ஐ.ஏ.எஸ். பணி மீது ஆர்வம் கொண்டு படித்து தனது ஆசையை நிறைவேற்றியவர்.
பண்ருட்டி அருகே மருவூர் கிராமத்தை சேர்ந்த ராமநாதன்-இளவரசி தம்பதியரின் மகள். இவருக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு அக்காள் உண்டு. தந்தை ராமநாதன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். தாயார் இளவரசிக்கு சிறுவயதில் திருமணம் முடிந்துவிட்டதால், திருமணத்துக்கு பிறகு படித்து பட்டதாரி அரசு பணிக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தற்போது பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்.
தாயின் விடாமுயற்சி, ஐஸ்வர்யாவை ஐ.ஏ.எஸ்.ஆகும் எண்ணத்தை அதிகரித்தது. மேலும் சுனாமியின் போது கலெக்டராக இருந்த ககன்தீப் சிங் பேடியின் பணியினை கண்டு மேலும் ஆர்வம் அதிகரித்தது.
பள்ளிப்படிப்பை முடித்தவுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் (இஇஇ) பட்டம் பெற்றார். படிக்கும் போதே சைதை துரைசாமி நடத்தும் ஐ.ஏ.எஸ்.கோச்சிங் சென்டரில் சேர்ந்து படித்தார்.
கல்லூரி படிப்பு முடியும் நேரத்தில் கேம்பஸ் இண்டர்வியூவில் 3 கம்பெனிகளில் வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வேலைக்கு செல்லாமல் ஐ.எஸ்.எஸ்.தேர்வுக்கு முழுமையாக தன்னை தயார் படுத்திக்கொண்டார்.
இதற்காக அறம் ஐ.ஏ.எஸ்.அகடாமியில் சேர்ந்து படித்தார். வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா, தினமும் 3 மணிநேரம் பத்திரிகைகள் படிப்பதை வழக்கமாக கொண்டார்.
முதன் முதலாக ஐ.ஏ.எஸ்.தேர்வு எழுதிய போது 630-வது இடம் கிடைத்தது, இதை தொடர்ந்து ரெயில்வே பைனான்ஸ் மார்க்கெட்டிங்கில் வேலைக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் 2020-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஐ.ஏ.எஸ்.தேர்வு எழுதியதில் அகில இந்திய அளவில் 47-வது இடத்திலும், தமிழ்நாடு அளவில் 2-வது இடத்திலும் தேர்ச்சி பெற்றார்.
இரவு பகலாக படித்து தனது ஐ.ஏ.எஸ்.கனவை நனவாக்கிகொண்ட ஐஸ்வர்யா முதன் முதலாக வேலூர் மாவட்ட பயிற்சி கலெக்டராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.
அதன்பிறகு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உதவி கலெக்டராக பணியாற்றி வருகிறார். தற்போது தூத்துக்குடி மாவட்ட புதிய கூடுதல் கலெக்டராக (ஊரக வளர்ச்சி முகமை) நியமிக்கப்பட்டு இன்று (புதன்கிழமை) பதவி ஏற்றுக்கொண்டார்.
–SKTS திருப்பதிராஜன் –