கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தின் சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிக்கும் பணி; கண்துடைப்பாக இல்லாமல் தொடர் நடவடிக்கை தேவை
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, சில அமைப்புகளின் போராட்டம் காரணமாக மேம்பாலத்துக்கு பதிலாக சுரங்க பாலம் அமைக்கப்பட்டது.
இது கோவில்பட்டி நகரின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதுடன் மழைக்காலத்தில் சுரங்க பாலத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு இருக்கிறது. மேலும் மிக முக்கியமாக பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் இருந்து சாக்கடை ஊற்று பெருகி சாலையில் ஓடுவது வாடிக்கையாகி விட்டது.
ரெயில்வே சுரங்க பாலம் என்பது நாளடைவில் சாக்கடை பாலம் என்று அழைக்கும் அளவுக்கு மாறிவிட்டது. பாலத்தின் இருபுறமும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
மக்களின் கஷ்டத்தை உணர்ந்து ரெயில்வே சுரங்க பாலத்தின் இருபுறமும் . சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று கோரி 5வது தூண் அமைப்பு சார்பில் அதன் தலைவர் சங்கரலிங்கம் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அரசியல் கட்சியினரும் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தினார்கள்.
சர்வீஸ் சாலை அமைக்க சில வணிக நிறுவனத்தினர் தாங்களாகவே முன்வந்து இடத்தை ஒதுக்கி கொடுத்தனர். சிலர் நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்பில் அமர்ந்து கொண்டு காலி செய்ய மறுத்து வருகின்றனர். சிலர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்தனர்.
இளையரசனேந்தல் சர்வீஸ் ரோடு ஆக்கிரமிப்புகள் அகற்றாததை கண்டித்து இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக ஐந்தாவது தூண் அமைப்பினர் அறிவித்தனர்.
இதை தொடர்ந்து நேற்று மாலை 4 மணி அளவில் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் லெனின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
கூட்டத்தில் 33 பட்டாதாரர்கள் தங்கள் கட்டிடத்தை தாமே முன்வந்து அகற்றாத விபரம் தெரிவிக்கப்பட்டது நீதிமன்றத்தில் 13 வழக்குகள் நிறுவையில் உள்ளன. எனவே ஆக்கிரமிப்புகள் காலி செய்யும் பணி நடைபெறவில்லை என்று நெடுஞ்சாலைத்துறை நபார்டு பொறியாளர் தெரிவித்தார்.
ஐந்தாவது தூண் அமைப்பினர் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை காலி செய்யவில்லை என்று கூறி கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனர்
இளையரசனேந்தல் சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் மொத்தம் அகற்ற வேண்டிய 90 ஆக்கிரமிப்புகளில் 57 ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே துறை மூலம் அல்லது பட்டாதாரர்களே தானே முன்வந்து அகற்றி உள்ளார்கள்
மீதமுள்ள 33 ஆக்கிரமிப்புகளில் 13 ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளன. அது தவிர மீதமுள்ள 20 ஆக்கிரமிப்புகளை அகற்ற நபார்டு நெடுஞ்சாலை துறையினருக்கு தாசில்தார் லெனின் அறிவுறுத்தினார்.
இதை தொடர்ந்து இன்று காலை தாசில்தார் லெனின் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. பாலத்தின் ஒரு புற சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிக்கும் பணி நடந்தது. ஜே.சி.பி.இயந்திரம் மூலம் கட்டிடம் இடிக்கப்பட்டது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த பணி வெறும் கண்துடைப்பாக இருந்து விடாமல் தொடர்ந்து 20 ஆக்கிரமிப்புகளையும் தொடர்ந்து இடித்து அப்புறப்படுத்த வேண்டும். அத்துடன் கோர்ட்டில் நிலுவையில் உள்ள 13 வழக்குகளையும் விரைந்து முடித்து கோர்ட்டு உத்தரவுடன் அந்த கட்டிடங்களையும் இடித்து மக்களுக்கு பயனபடும் வைகையில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.