• May 19, 2024

5 நாட்கள் தீபாவளி கொண்டாட்டம்

 5 நாட்கள் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி என்பது உற்சாகத்தை தரக்கூடிய நாளாகும். இது இருளை நீக்கி ஒளியை தரக் கூடிய நாளாகும்.

ராம பிரான், நிலவு இல்லாத அமாவாசை நாளில் அயோத்திக்கு திரும்பியதால் அவரை வெளிச்சத்துடன் வரவேற்பதற்காக வீடுகள் தோறும் ஏராளமான ஒளி மயமான விளக்குகளை ஏற்றி, மக்கள் வரவேற்றதாகவும், அதை நினைவுப்படுத்தும் விதமாகவே ஆண்டுதோறும் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன.

தீபாவளி 5 நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, தீபாவளி நாளில் லட்சுமி தேவியையும் விநாயகப் பெருமானையும் வழிபட வேண்டும். இதனால் செல்வ வளம் பெருகுவதுடன், அறியாமை நீங்கி, ஞானம் கிடைக்கும்.

தீபாவளி மட்டுமின்றி அதற்கு முந்தைய இரண்டு நாட்களும், பிந்தைய இரண்டு நாட்களும் மிக முக்கியமான, மங்கலகரமான நாளாக கருதப்படுகிறது.

இந்த நாட்களில் அப்படி என தனிச்சிறப்பு உள்ளது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

​இந்தியாவில் தீபாவளி பண்டிகை

 :தீபாவளி, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் மிக சிறப்பாக, கோலாகலமாக கொண்டாடப்படும் மக முக்கியமான பண்டிகையாகும். அனைவராலும் கொண்டாடப்பட்டாலும் இந்த பண்டிகை இந்தியா முழுவதம் ஒரே நாளில், ஒரே முறையில் கொண்டாடப்படுவது கிடையாது. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு நாளிலும் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தென்னிந்தியா மற்றும் பஞ்சாப்பில் நவம்பர் 12 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வட இந்திய மாநிலங்கள் பலவற்றில் நவம்பர் 10 ம் தேதி தந்தேராஸ் துவங்கி, நவம்பர் 14 வரை கொண்டாடப்பட உள்ளது. வாரணாசியில் நவம்பர் 26 ம் தேதி தான் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.

கோவா மற்றும் இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் நவம்பர் 11 ம் தேதி, அதாவது தீபாவளிக்கு முந்தைய நாளில் தான் கொண்டாட உள்ளனர்.

ஐந்து நாள் கொண்டாட்டம்

தந்தேராஸ், சோட்டி தீபாவளி, தீபாவளி, கோவர்த்தன பூஜை, பாய் தூஜ் என 5 நாட்கள் பண்டிகையாக வடஇந்தியாவில் கொண்டாடுகிறார்கள்.

இந்த ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தனிச்சிறப்பும், தனியான காரணமும் உண்டு. தீபாவளியை இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் ஒரு நாள் பண்டிகையாக கொண்டாடும் போது, வடஇந்தியாவில் மட்டும் எதற்காக 5 நாள் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள் என்பதற்கான காரணத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

முதல் நாள்-தந்தேராஸ்:

தீபாவளியின் துவக்கமாகவும் செல்வ வளத்தை பெறுவதற்கான நாளாகவும் திரியோதசி திதியில் தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது.

இது லட்சுமி தேவி அவதரித்த நாளாகவும், ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்திரி பகவான் அவதரித்த நாளாகவும் கருதப்படுகிறது.

இந்த நாளில் மக்கள் வீட்டை சுத்தம் செய்து, தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த மங்கல பொருட்கள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நாளில் எந்த பொருள் வாங்கினாலும் அது பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை.

2ம் நாள் – சோட்டி தீபாவளி

தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகும் நாளே சோட்டி தீபாவளி என அழைக்கப்படுகிறது. சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படும் இந்நாளை நரக சுதுர்த்தசி என்றும் அழைக்கிறார்கள்.

இந்த நாளில் அதிகாலையிலேயே எழுந்து வீடு முழுவதும் பூக்களாலும், விளக்குகளாலும், வண்ண வண்ண ரங்கோலி இட்டும் அலங்கரித்து, எண்ணெய் விளக்குகளும் ஏற்றுவார்கள். இதனால் இருளும், தீமைகளும் விலகிடும் என்பது நம்பிக்கை.

3ம் நாள் – தீபாவளி

முக்கிய நாளான தீபாவளி அன்று மக்கள் புத்தாடைகள் அணிந்து, குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து நல்ல நேரத்தில் லட்சுமி தேவிக்கு பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். லட்சுமி பூஜை என்பது மாலை நேரத்திலேயே செய்யப்படுவதாகும். இந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி மாலை 05.40 முதல் 07.36 வரையிலான நேரம் லட்சுமி பூஜை செய்வதற்கான நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த நாளில் மக்கள் இனிப்புக்கள், பரிசுகள், வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இரவு நேரத்தில் வீடுகளில் விளக்கேற்றியும், வானில் பட்டாசு வெடித்தும் இனிமையாகவும், ஒளிமயமாகவும் கொண்டாடுகிறார்கள்.

*4ம் நாள் -கோவர்த்தன பூஜை

அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை அன்று ஸ்ரீ கிருஷ்ண பகவானை கொண்டாடும் விதமாக கோவர்த்தன பூஜை செய்து வழிபடுவார்கள். கோவர்த்தன மலையை தாங்கி பிடித்தபடி நிற்கும் கிருஷ்ணரின் உருவத்தை வைத்து, பல வகையான நைவேத்தியங்கள் இனிப்புகள் படைத்து மக்கள் வழிபடுவார்கள்.

இந்த நாளில் பட்வா எனப்படும் பண்டிகையும் கொண்டாடப்படும். இது கணவன்- மனைவி ஒற்றுமையை பலப்படுத்தும் ஒரு நாளாகும்.

கணவன்மார்கள் தங்களின் மனைவிகளுக்கு பிடித்த பரிசுகளை வாங்கிக் கொடுத்து, அவர்களை மகிழ்விப்பார்கள். இது மங்கலகரமான நாள் என்பதால் பலரும் புதிய தொழில்களை துவங்குவார்கள்.

5ம் நாள் – பாய் தூஜ்

ஐந்தாம் நாள் துவிதியை திதி அன்று பாய் தூஜ் எனப்படும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது அண்ணன் – தங்கை உறவை போற்றும் நாளாக கருதப்படுகிறது. தங்களின் உடன்பிறந்தவர்களின் மீது தாங்கள் வைத்திருக்கக் கூடிய பாசத்தை வெளிப்படுத்துவதற்கும், அதை பலப்படுத்துவதற்கும் ஏற்ற நாளாக இந்த நாள் விளங்குகிறது.

தொகுப்பு: காசிவிஸ்வநாதன், திருநெல்வேலி-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *