தூத்துக்குடியில் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு:-
தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீனவர்களை பாதிக்கக்கூடிய வகையில் செயல்படுவதாக கூறப்படுகிறது. மீன்பிடி படகுகளுக்கு லைசென்ஸ் வேண்டும், ஒரு படகில் நான்கு மீனவர்களுக்கு மேல் மீன் பிடிக்க செல்லக் கூடாது, மீன்பிடி படகுகளுக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இன்சூரன்ஸ் கட்ட வேண்டும், நாட்டு படகு மற்றும் பைபர் படங்களுக்கு பச்சை வண்ணம் பூச வேண்டும்,
படகில் பயன்படுத்தப்படும் இஞ்ஜினுக்கு ஜி.எஸ்.டி. பில் வேண்டும், படகை புதிதாக செய்ததற்கான ஜி.எஸ்.டி. பில் வழங்க வேண்டும் இந்த சான்றுகளை வழங்கும் படகுகளுக்கு மட்டுமே டீசல் மானியம் வழங்கப்படும் என்று கூறினாராம்.
இது குறித்து பேச்சுவார்த்தைக்கு சென்ற மீனவர்களுக்கு உரிய முறையில் பதிலளிக்காததால் மீன்வளத்துறை உதவி இயக்குனரை கண்டித்தும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.







