போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்
![போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்](https://tn96news.com/wp-content/uploads/2023/10/fb85ecb6-1c79-4331-9428-50d5ef977aa3.jpeg)
போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கைத்தெரியுமா உங்களுக்கு?
எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வி தாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். சட்டம் படிக்க முதலில் விரும்பினாலும் பின்னர் ஆர்வம் மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அங்கே ஜோன்ஸ் சால்குக்கு இன்ப்ளுன்சா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் அந்த வைரஸை அப்பொழுது தான் கண்டறிந்து இருந்தார்கள்.
முதலாம் உலகப்போர் சமயத்தில் ப்ளூ காய்ச்சல் பரவி எண்ணற்றோர் இறந்து போனார்கள். இரண்டாம் உலகப்போர் வரவே மீண்டும் அப்படி நோய் ஏற்படலாம் என்று பல மில்லியன் டாலர்களை அது சார்ந்த ஆய்வுக்கு அமெரிக்க அரசு கொட்டியது. சால்க் அதே சமயத்தில் வைரஸ்களை கொல்லாமலே அவற்றை செயலிழக்க வைத்து அதன் மூலம் அவற்றையே நோய் எதிர்ப்புக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அரசின் ஊக்கம் அவரை இன்னமும் வேகப்படுத்தியது.
உலகம் முழுக்க இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள். அதில் தொன்னூறு சதவிகிதம் பேர் பால் மணம் மாறாத சிறுவர்கள். அமெரிக்காவில் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு முறை நோய் தாக்கினால் பின்னர் அதில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அளவுக்கு கொடுமையான வியாதி இது.
பிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் 7 பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார் சால்க். பெரும்பாலும் செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ்களை கொண்டே சிகிச்சை தரப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். ஜான் எண்ட்லர் ஆய்வுக்கு தேவையான் தூய்மையான போலியோ வைரஸ்களை உருவாக்குவதில் வெற்றி கண்டிருந்தார். சால்க் பார்மல்டிஹைடை கொண்டு போலியோ கிருமிகளை கொன்றார். முதலில் குரங்குகளில் கொல்லப்பட்ட வைரஸ்களை கொண்ட மருந்தை சோதித்து பார்த்த பின்பு,தாங்களே மருந்தை செலுத்திப்பார்த்தார்கள்.
யாருக்கும் எந்த தீங்கும் உண்டாகாமல் இருக்கவே நாடு முழுக்க 5 லட்சம் குழந்தைகளிடம் இந்த மருந்தை செலுத்தினார்கள். இரண்டு வருடங்கள் நடந்த நெடிய ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சால்க் கண்டுபிடித்த தடுப்பு மருந்து எந்த தீங்கும் இல்லாதது என்று அறிவிக்கப்பட்டது.
மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வருடம் அமெரிக்காவில் 45,000. பேருக்கு இளம்பிள்ளை வாத நோய் இருந்தது. மருந்து அறிமுகமான வேகத்தில் 5 வருடங்களில் இந்த எண்ணிக்கை 910 என்கிற அளவுக்கு விழுந்தது.
சால்க்கின் தடுப்பு மருந்துக்கு அவரை காப்புரிமை பெற சொல்லி உடனிருந்தவர்கள் அறிவுரை சொன்னார்கள். பல கோடி டாலர்களை அவர் அதன் மூலம் ஈட்டியிருக்க முடியும். சால்க் என்ன சொன்னார் தெரியுமா ? “என் மருந்து சூரியனைப்போல உலகுக்கே பயன்படக்கூடியது . சூரியனுக்கு காப்புரிமை வாங்கலாமா ? சொல்லுங்கள் ?”. அத்தகு அரிய மனிதரை நினைவு கூர்வோம். போலியோ தடுப்பு மருந்து இன்றைய தினம் தான் (அக்டோபர் 30)முதன்முதலில் அமெரிக்காவில் பெருமளவில் சோதிக்கப்பட்டது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)