• May 9, 2024

ஓவர்சியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 ஓவர்சியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இளையரசனேந்தல் பஞ்சாயத்தில் ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை அவதூறாக பேசிவரும் ஓவர்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இளையரச னேந்தல் கிளைதலைவர் பாண்டியன், தேசிய விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் சீனிவாசன், ஊரக வேலைதிட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இளையரசனேந்தல் பஞ்சாயத்து இளையரசனேந்தல், லட்சுமிஅம்மாள்புரம், கொடைப்பாறை, அய்யம்பட்டி ஆகிய கிராம பகுதிகளை உள்ளடக்கி சுமார் 2000 அட்டை தாரர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்படுவதில்லை. அத்துடன் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளை கவனிக்க ஆயா பணி அமர்த்தப்படவில்லை.

மேற்படி பணிகளை கவனிக்கும் ஓவர்சியர் தொழிலாளர்களை ஒருமையில் விமர்சித்து பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். குறிப்பாக பெண் தொழிலாளர்களையும் அவர் அவமரியாதை செய்து வருகிறார். அதனால் பணி நேரத்தில் அத்துமீறி செயல்பட்டு வரும் ஓவர்சியர் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து, 100 நாட்கள் வேலை திட்டத்தை 200 நாட்கள் ஆக அதிகரிக்கவும் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *