அஞ்சி கொய்யாப்பழம்… (சிறுகதை)

அழகேசன்…அழகானவர். ஆனால் கொஞ்சம் கடுமையானவர். தான்பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்பார்.
அவரது மனைவி ரஞ்சிதம்.அமைதியானவர்.கணவன் சொல்லை மீறமாட்டார்.அவரை கண்டாலே அவருக்கு ஒரு பயம்.
கணவர் சத்தம் போட்டு பேசினால் நடுங்கிப்போவார்.
அன்று காலை அழகேசன் மார்க்கெட்டுக்குப் போனார்.ஒரு கூடையில் காய்கறிகள் வாங்கிவந்தார்.அதே கூடையில் பத்து கொய்யாப்பழங்களையும் வாங்கிப்போட்டிருந்தார்.அந்த பழங்கள் நன்றாக பழுத்திருந்தன.
மார்க்கெட்டுக்கு சென்றுவந்த அழகேசன் தன் மனைவியிடம் காய்கறி கூடையை கொடுத்தார்.காய்கறிகளை கூடையிலிருந்து தனியே எடுத்துவை என்றார்.
ரஞ்சிதம் அவர் சொன்னபடி காய்கறிகளை தனியே எடுத்து ஒருபாத்திரத்தில் போட்டார்.மீதி பத்து கொய்யா பழங்கள் அந்த கூடையில் இருந்தன.
அதை என்ன செய்ய என்று ரஞ்சிதம் யோசித்தார்.அவருக்கு கொய்யா பழம் பிடிக்காது.விதையாக இருக்கும்.பல்லில் மாட்டிக்கொள்ளும் என்று கொய்யாபழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பார்.
அதைப்பார்த்த அழகேசன் கோபத்தில்..ஏய் கொய்யா பழத்தை முறைச்சிப்பாக்க…அது சிவப்பு கொய்யா..நல்ல சத்து..எடுத்து சாப்பிடு என்றார்.
ரஞ்சிதம் மெல்ல… எனக்கு கொய்யாப்பழம் பிடிக்காது என்றார். அவ்வளவுதான் அழகேசன் ஆவேசம் ஆனான். ஏய் ஐஸ்கிரீம் சாப்பிடுவ.அது..சளி பிடிக்கும்.ஆனா அது வேணுமுன்னு சொல்வ…கொய்யாப்பழம் உடம்புக்கு நல்லது.ஆனா அது பிடிக்காது என்ப..
என்ன நினைச்சிக்கிட்டு இருக்க..உனக்காகத்தான கொய்யாப்பழம் வாங்கிட்டு வந்தேன் என்று காட்டு கத்து கத்தினான்.
அது வீடு முழுவதும் எதிரொலித்தது.அடுத்து அவன் கத்துவதற்குள் எடுத்துவிடவேண்டுமென்று ரஞ்சிதம் அஞ்சி கொய்யாப்பழத்தை எடுத்தார்.மீதி எத்தனை கொய்யாப்பழம் அந்த கூடையில் இருக்கும்..
உங்களுக்கு ஒரு புதிர்! கண்டுபிடியுங்கள்…
முடியவில்லையா..இதோ பதில்..
கூடையில் மொத்தம் இருந்தது பத்து கொய்யாப்பழம்.அதில் ரஞ்சிதம் எடுத்தது ஒரே பழம்தான்.என்ன அஞ்சிபழமல்லாவா எடுத்தாள் என்று நீங்கள் கேட்கலாம்.ரஞ்சிதம் கணவன் ஏசுவானே என்று அஞ்சி அதாவது பயந்து ஒரே ஒரு பழம் மட்டும் எடுத்தாள்.எனவே அஞ்சி என்பதை எண்ணிக்கையாக எடுத்தால் அந்த கணக்கு தப்பாகிவிடும்.
அழகேசனும் மனைவிக்கு பிடிக்காததை வாங்கிவந்து அவளை சாப்பிடவைக்க நினைத்தது தப்புக்கணக்காகிவிட்டது.

–வே.தபசுக்குமார்.முள்ளன்விளை.தூத்துக்குடி–
