• May 19, 2024

பசி… ( சிறுகதை)

 பசி… ( சிறுகதை)

ரமேஷ்…கட்டிளங்காளை..முறுக்கேறிய உடம்பு…விவசாய கூலி…!

மது குடிக்கும் பழக்கம் உண்டு. மது குடித்துவிட்டால் ஆள்மாறிவிடுவான்..ஆங்கிலம் தெலுங்கு மலையாளம் என்று பலமொழிகளில் யாரையாவது திட்டுவான்..

ரமேசின் மனைவி ராக்காயி..கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பாள்.வயல்வேலைக்கு செல்வாள்.அதில்கிடைக்கும் பணத்தில் சமைத்து ரமேசுக்கு சாப்பாடு கொடுப்பாள்.ஆனால் ரமேஷ் தான் உழைக்கும் பணத்தை குடிப்பதற்கே செலவு செய்வான்.

தட்டிக்கேட்டால் ராக்காயியை அடித்து உதைப்பான்.அவள் கறுப்பாக இருப்பதாக சொல்லி அவள் மனதை நோகடிப்பான்.பொறுத்து பொறுத்து பார்த்த ராக்காயி ஒருநாள்  கணவனை விட்டுவிட்டு தாய்வீட்டுக்கு சென்றுவிட்டாள். ரமேசும்..போடி..நீ இல்லன்னா..என்னால சமைக்கமுடியாதா..போ..என்றுவிரட்டினான்.

இரண்டுவாரம் ஆச்சு…ரமேஷ் விவசாய வேலைக்குபோய்விட்டு வீட்டுக்குவந்து ..ஏதோ..சமைத்தான்.அடுப்பு புகை..கண் எரிச்சல்..அவஸ்தை..யப்பாட..ஒரு சோறு பொங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.எத்தனை நாளைக்கு..இப்படி கஷ்டப்படுவது..ச்சை..போனாளே ராக்காயி..இரண்டுவாரமாச்சேன்னு திரும்பிவந்தாளா..ம்..அப்படி என்ன கோவம்..

வரவேண்டியதுதானே..என்று முணங்கினான்.காய்கறிகளை வெட்டிப்போட்டு குழம்புவைத்தான்..உப்பு இருக்கா என்று டேஸ்டுபார்த்தான்..ஆ..உப்பு சரியா இருக்கு..செம டேஸ்டு என்று தன்னைத்தானே புகழ்ந்துகொண்டான்.

சிறிது நேரம் கழித்து கைகால்களை கழுவி விட்டு வீட்டுக்குள் வந்தான்.வாழை இலையை விரித்து..தண்ணீர் தெளித்து..சாதத்தை எடுத்துவைத்தான்.பின்னர் புளிகுழம்பை அதில் ஊற்றி…பிணைந்து  சாப்பிட்டான்.அடடா..வாழை இலையில் சாப்பிடுறதே தனி சுவை..ராக்காயி இல்லன்னா சாப்பிடமுடியாதா..ம்..ஆம்பளையா..கொக்கா…என்று மனதில் வீரவசனம் பேசினான்.

சாப்பிட்டுவிட்டு இலையை தூக்கி வெளியே போட்டுவிட்டு கையை அலும்பிவிட்டு வீட்டு திண்ணையில் அமர்ந்தான்.தூக்கம் கண்ணைக்கட்டியது..நல்லா காத்துவருது..ம்..உட்காரமுடியாது..போய் படுப்போம் என்றபடி..வீட்டுக்குள்வந்து பாய்விரித்துபடுத்தான்.சிறிதுநேரத்தில் குறட்டை சத்தம்வந்தது.

ஒருமணி நேரம் கழித்து திடீரென்று விழித்துப்பார்த்தான்.கதவு திறந்தே கிடந்தது.அட..கதவை கூட பூட்ட மறந்திட்டோமே..அவ்வளவு அசதி என்றபடி கதவை பூட்டிவிட்டு வந்து பாயில் அமர்ந்தான்.அவனுக்கு ராக்காயி நினைவு வந்தது.பக்கத்திலே படுத்திருப்பா..மாமாமாமான்னு கூப்பிடுவா..அவளா தொட்டு தொட்டுபேசுவா..நான்தான் அவளை புறக்கணிப்பேன்..கறுப்பான அவளை என் தலையிலே கட்டிட்டாங்கன்னு நினைப்பேன்..

ஆனா..அவா குணத்திலே தங்கம்தான்.என்காலை அமுக்கிவிட்டபடி இருப்பாள்.எப்போ தூங்குவான்னு தெரியாது..அவா அவங்க அம்மா வீட்டுக்கு போவான்னு நான் நினைக்கலை.வழக்கம்போல குடிச்சிட்டுவந்து அடிச்சிட்டேன்.தப்புத்தான்..என்று ரமேஷ் மனதுக்குள் புலம்பினான்.படுத்தான்..அவனுக்கு தூக்கம்வரவில்லை.ராக்காயி முகம் வந்துவந்து போனது.குழம்பு சுவையா இருக்க உப்பு தேவை மாதிரி..வாழ்க்கை சுவையா இருக்க மனைவி வேணும் போலிருக்கே என்று நினைத்தான்.

இளமை ஊஞ்சலாட..உறக்கம்வர மறுக்க..சுவரையே பார்த்தபடி ரமேஷ் படுத்திருந்தான்.மனம் அலை பாய்ந்தது.கலியாணமாகி இரண்டுமாசந்தானே ஆச்சு..அதுக்குள்ளே ராக்காயியை பிரிந்து இருக்கமுடியலையே என்றபடி புரண்டுபுரண்டு படுத்தான்.விடிந்தது.சேவல் கூவியது.

ரமேஷ் அவசரமாக எழும்பி குளித்தான்.நல்ல வேட்டி சட்டையை எடுத்து உடுத்தினான்.தலைக்கு எண்ணை தேய்த்து சீப்பால் தலைவாரினான்.வீட்டிலிருந்து செலவுக்கு பணம் மற்றும் ஒரு மஞ்சள்பையை எடுத்துக்கொண்டு வீட்டைப்பூட்டிவிட்டு பக்கத்து கிராமத்தில் உள்ள ராக்காயி வீடு தேடி புறப்பட்டான்.எப்படியாவது சமாதானம் செய்து ராக்காயியை கூட்டிட்டுவந்திடணுமுன்னு நினைச்சான்

.மூணு கிலோ மீட்டர் தூரம் நடந்தான்.அங்குள்ள பெட்டிக்கடையில் வாழைப்பழம் முறுக்கு வாங்கிக்கொண்டு நடந்தான்.இரண்டு தெரு தாண்டி மூன்றாவது தெருவில் சென்றபோது ராக்காயி வீட்டுக்குவெளியே நின்று கொண்டிருந்தாள்.ரமேசை பார்த்ததும் லேசாக சிரித்துவிட்டு வீட்டுக்குள் ஓடினாள்.அதைப்பார்த்ததும் ரமேசுக்கு கொஞ்சம் சந்தோஷம்..எப்படியும் ராக்காயியை கூட்டிட்டுபோயிடலாம் என்ற நம்பிக்கையுடன் வெளியே செருப்பை கழற்றிப்போட்டுவிட்டு..வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தான்.

ராக்காயியின் தாய் சிகப்பி கனலாக வார்த்தையை கொட்டினாள்.எதுக்காக வந்திருக்காரு..பொண்ணு கட்டும்போது கறுப்புன்னு தெரியாதா..பார்த்துதானே கட்டுனாரு..இப்பம் என்ன..எம்புள்ளையை கறுப்புன்னு திட்டி அடிக்கிறது என்ன நியாயம்..அவா அவங்க அப்பாமாதிரி கொஞ்சம் கறுப்பு..அவ்வளவுதான்..இவரு என்ன மன்மத குஞ்சா..இவருக்கு வெள்ளைத்தோல் கிடைக்குமா..என்று எகிறினாள்.

ரமேசுக்கு யாரோ கன்னத்தில் அடித்ததுபோலிருந்தது.அவனது தன்மா

னம் தலை தூக்கியது.என்ன எனக்கு சிவப்புதோல் கிடைக்காதா..காசு கொடுத்தா கிடைக்கப்போகுது.என் அம்மா சொன்னான்னு ராக்காயியை கெட்டினது தப்பா போச்சு என்றபடி எழுந்தான்.வாழைப்பழம் முறுக்குவாங்கிவந்த பையை கட்டிலில்வைத்துவிட்டு ரமேஷ்படக்கென்று எழுந்து வெளியேவந்து வேகமாக நடந்தான்.கையில் தண்ணீர்செம்போடுவெளியே வந்த ராக்காயி..ரமேஷ் தூரத்தில் நடந்துசெல்வதை பார்த்தாள்.அவள் கண்களில் கண்ணீர்துளி நிரம்பிநின்றது.

: ரமேஷ்..மனம்போன போக்கில் நடந்தான்.எனக்கு சிவப்பு தோல்கிடைக்காதா..ம்..பாத்துருவோம் என்றபடி ஒரு தெருவில் வேகமாக நடந்தான்.அந்த பகுதியில் நடந்துவந்த ஒருவரிடம் அந்தவீட்டின் முகவரியை விசாரித்துவிட்டு ஊருக்கு ஓதுக்குப்புறமாக இருந்த குடிசை வீட்டை நோக்கி நடந்தான்.கதவை தட்டினான்.

இருபது வயது மதிக்கத்தக்க ஒருபெண் கதவை திறந்தாள்.சேலை கட்டிய நிலவாக காட்சி தந்த அவள் வாங்க என்று ரமேசை வரவேற்றாள்.எலுமிச்சை நிறம்..இளம் சிவப்பு சேலையில் தேவதையாக தோன்றினாள்.திருமணத்துக்கு முன்பே..அந்த பெண்ணை கேள்விப்பட்டிருக்கான்.மஞ்சுளா..என்றாலே இளைஞர்கள் மனதில் ஒரு கிளுகிளுப்பு தோன்றும்.ஆனால் ரமேஷ் அந்த ஆசையை அடக்கிவைத்திருந்தான்.ராக்காயி அம்மா திட்டியதால்..ரமேஷ் எண்ணம் தடம்புரண்டது.

ராக்காயி எதுக்கு..துட்டு இருந்தா..மஞ்சுளாவே போதும்..என்று அவன் மனம் சொல்லியது.ரமேஷ் தடுமாற்றத்துடன் நின்றபோது மஞ்சுளா அவனை குடிசையில் மறைவாக தடுப்பு ஏற்படுத்தியிருந்த ஒருபகுதிக்கு அழைத்துச்சென்றாள்.ரமேஷ் அவள் பின்னால் சென்றான்.கட்டிலை காட்டி அவள் அமரச்சொன்னாள்.

ரமேஷ் தயக்கத்துடன்..நிற்க அவள் அவன் கைகளை பிடித்தாள்.அவளதுவளையல் ஒலியில் ரமேசுக்கு..வியர்த்தது.அவள் கட்டிலில் அமர்ந்தாள்.ரமேஷ் கட்டிலில் ஓரத்தில் அமர்ந்தான்.அவள் நெருங்கிவந்தாள்.என்ன புதுசா என்று அவனை கலாய்க்க அவனுக்கு உடல்படபடத்தது.அவள்..என்ன பயமா…என்று கேட்க..அவன் இல்லை..என்று சமாளித்தான்.அப்போ..வாங்க..என்று அவள் நெருங்கி அணைக்க…அவன் மனசில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறந்தன.

சிவப்பு தோல் அவன் உடலை உரசியது.இது எனக்கு கிடைக்காதா என்றபடி அவன் அவளை அணைக்க முயன்றபோது..குடிசையின் ஒருபக்கத்தில் திடீரென்று ஒருகுழந்தையின் அழுகை சத்தம் எதிரொலித்தது.மஞ்சுளா அவனது அரவணைப்பிலிருந்து விடுபட்டு..கொஞ்சம் இருங்க..பசி..பசி..குழந்தைக்கு என்றபடி வேகமாக எழுந்து சென்றாள்.

குடிசையின் ஒருபக்கத்தில் தொட்டிலில் புரண்டு அழுதுகொண்டிருந்த குழந்தையை வாரி எடுத்து முத்தம்கொடுத்துவிட்டு..அதன்பசியை தீர்க்க தயாரானாள்.பால்குடித்த அந்த குழந்தையின் பிஞ்சு முடிகளை கோதிவிட்டபடி அதன் அழகை ரசித்தாள்.பெண்குழந்தை நீ..நாளைக்கு..நீ..எப்படியோ..என்றபடி ஏக்கத்துடன் பார்த்தாள்.

ஐந்துநிமிடம் கழிந்தது.அந்த குழந்தையின் பசியை தீர்த்த மஞ்சுளா ..தொட்டிலில்போட்டு ஆட்டினாள்.அது மலங்க மலங்க பார்த்துவிட்டு..லேசாக கண்களை மூட..மஞ்சுளா மெல்ல அங்கிருந்து வாடிக்கையாளர் இருந்த அறையை நோக்கி வந்தாள்.

அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அங்கு ரமேஷ் இல்லை.கட்டில் அருகே ஸ்டூலில்  தண்ணீர்  நிரம்பி இருந்த செம்பு காலியாக இருந்தது.கட்டிலில் கிடந்த தலையணையை மஞ்சுளா புரட்டிப்பார்த்தாள்.புத்தூம்புது இருநூறு ரூபாய் நோட்டு இருந்தது.மஞ்சுளா பதட்டத்துடன் வெளியேவந்துபார்த்தாள்.அங்கு ரமேசை காணவில்லை.குழந்தையின் அழுகுரல் அவனை உலுக்கியிருக்கலாம் என்று நினைத்த மஞ்சுளா முகத்தை கழுவிவிட்டு மீண்டும் மேக்கப்போட்டு அடுத்த வாடிக்கையாளரை எதிர்நோக்கி தயாரானாள்.

மஞ்சுளா வீட்டிலிருந்து முகம் வியர்க்க வீட்டுக்கு நடந்தான் ரமேஷ். ஏதோ ஒரு குற்ற உணர்வு அவனை உலுக்கியது.பல தெருக்களைத்தாண்டி அவன் வீட்டை நெருங்கியபோது வீட்டு திண்ணையில் மஞ்சள்பையில் வாழைப்பழம் மற்றும் முறுக்குடன் ராக்காயி காத்திருந்தாள்.அவளைப்பார்த்ததும் ரமேசுக்கு அவனை அறியாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க..ஓ..என்று அழுதபடி ராக்காயி ஓடிவந்து ரமேசை கட்டித்தழுவினாள்.இருவரின் கண்ணீரும் நிற்க வெகு நேரமாகியது.

வே.தபசுக்குமார்.முள்ளன்விளை.தூத்துக்குடி.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *