கோவில்பட்டி வள்ளுவர் நகரில் வசிப்பவர்களுக்கு பட்டா; த. மா. கா. வலியுறுத்தல்
கோவில்பட்டி நகர த. மா. கா. தலைவர் ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர் இன்று தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பின்னர் தாலுகா அலுவலகத்தில் நடந்து வரும் ஜமாபந்தி நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கபட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது :-
கோவில்பட்டி நகராட்சி வார்டு எண்கள் 23மற்றும் 24கடலையூர் ரோடு, வள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக குடியிருந்து வரும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் இன்று வரை அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.
மேலும்
கடந்த 2017 ஆம் ஆண்டில் வள்ளுவர் நகர் பகுதியில் சர்வே நம்பர் 513 ல் அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பதில் ஒரு சில நபர்களுக்குள் ஏற்பட்ட சட்டம் -ஒழுங்கு பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு அன்றைய வட்டாட்சியர் சர்வே நம்பர் 513 முழுவதும் நிலங்களை பத்திர பதிவு செய்வதற்கு தடை விதித்து சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.
அதன் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் தங்களது நிலங்களை குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு அன்றைய தினம் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்ந்து 6 ஆண்டுகளைக் கடந்து அமலில் இருப்பது அப்பாவி மக்களை ஏழை எளிய மக்களை பெருமளவில் பாதித்துள்ளது.
பொது அமைதி நிலவி வரும் அப்பகுதியில் 2017ஆம் ஆண்டில் வட்டாட்சியர் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்து சர்வே எண் 513ல் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை பத்திர பதிவு செய்வதற்கு அனுமதி அளித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.