• May 16, 2024

நலம் விரும்பி …சிறுகதை

 நலம் விரும்பி …சிறுகதை

பிரபலமான நகைக்கடை… நகரின் முக்கிய பகுதியில் அமைந்திருந்தது. எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும்…
அன்று இரவு வியாபாரம் முடிந்ததும் நகை கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். பனி அதிகமாக இருந்ததால் காவலாளி தலையில் பனிக்குல்லா மாட்டியபடி நகைகடை கட்டிடத்தை சுற்றி வந்தார்.பனிரெண்டு மணி ஆனதும் காவலாளி மீண்டும் ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு பிளாஸ்டிக் சேரில்வந்து அமர்ந்தார்.கண்களை தூக்கம் தழுவியது.
அதிகாலை 5 மணிக்கு விழித்தவர் எழுந்து கடையை சுற்றிப்பார்த்தவருக்கு அதிர்ச்சி. கடையின் பின்புறம் கட்டிடத்தில் ஓட்டை போடப்பட்டிருந்து. செங்கல் துகள்கள் சிதறிக்கிடந்தன. ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சுவரில் துளையிடப்பட்டிருந்தது.
காவலாளிக்கு கால்கள் ஆடின. நடுக்கத்துடன் கடை உரிமையாளருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். என்னய்யா பண்ணின நீ என்று திட்டியவர்… 5 நிமிடத்தில் அங்கிருந்தார்.
அடுத்த நிமிடம் அந்த பகுதி இன்ஸ்பெக்டர் போலீஸ்படையுடன் ஆஜர். துப்பறியும் மோப்ப நாய் விரைந்து வந்தது. கைரேகை நிபுணர் அங்கு வந்து சேர்ந்தார்.
நகைக்கடையின் பின்பகுதியில் துளையிடப்பட்ட இடத்தை இன்ஸ்பெக்டர் பார்வையிட்டார். உள்ளூர் பத்திரிகை நிருபர்..சார் எவ்வளவு நகை திருட்டு போயிருக்கு…என்று செய்தி ஆவலில் கேட்டார். அதற்கு அவர் கதவை திறந்து இனிதான் பார்க்கவேண்டும் என்றார்.
அந்த நேரத்தில் கடை ஊழியர் சாவியுடன் வேகமாக வந்து சேர்ந்தார்.
ஊழியர் கதவை திறக்க இன்ஸ்பெக்டர் மற்றும் கடை உரிமையாளர் ,ஊழியர் உள்ளே சென்றனர். நகை திருட்டு போயிருக்கா என்று பார்வையிட்டனர். நகைகள் இருந்த பகுதி மற்றும் பீரோ,மேஜை டிராயர் எதுவும் உடைக்கப்படவில்லை.
கடையில் நகை திருட்டு போயிருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தது. கடை உரிமையாளர் முகத்தில் சின்ன புன்னகை.
இன்ஸ் பெக்டர் தமது எல்கைக்குள்பட்ட பகுதியில் கொள்ளை நடக்காதததால் மிடுக்காக நடந்தார்.
இந்தா பாருங்க…திருடன் நகைக்கடை சுவரில் ஓட்டைபோட்டிருக்கான். அந்த நேரம் போலீஸ் ரோந்து வந்ததால பிடிபட்டுவிடுவோமுன்னு பயந்து கடையிலே கொள்ளையடிக்காம ஓடிட்டான் என்று சொல்லி பெருமைபட்டு கொண்டார்.
அப்போது திருடன் சுவரில் துளைபோட்ட பகுதியில் பதிவான திருடனின் ரேகைகளை பதிவு செய்த கைரேகை நிபுணர் திருடன் கடைக்குள் போயிருக்கானா போகவில்லையா? உள்ளே ஏதாவது தடயம் சிக்குகிறதா? என்று பார்க்க நினைத்தார்.
முன்பக்க வாசல்வழியாக உள்ளே சென்றவர் துளையிடப்பட்ட சுவரின் முன்பகுதிக்கு வந்தார். உள்ளே கிடந்த செங்கல் துகள்களுக்கு இடையே ஒரு துண்டு சீட்டு கிடந்தது.அதை எடுத்த அவர் இன்ஸ்பெக்டரிடம் நீட்டினார்.
அதைபடித்த இன்ஸ்பெக்டருக்கு தூக்கிவாரிப்போட்டது.
அதில்…வணக்கம்.
நகைக்கடை கட்டிடம் பலமில்லாமல் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம்.விரைவில் வேறு நல்ல பலமான கட்டிடத்துக்கு நகைகடையை மாற்றி ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
உங்கள் நலம் விரும்பி.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனே பயத்துடன் சுவரில் துவாரமிடப்பட்ட பகுதியை பார்த்தார்.செங்கல் உதிர்ந்து கொண்டிருந்தது. சுவரை தொட்டுபார்த்தார் ஈரமாக இருந்தது. கடை உரிமையாளரை முறைத்து பார்த்தார்.வாடகை கம்மின்னு முப்பது வருஷமா இந்த கட்டிடத்தில் இருக்கோம்…கட்டிடம் ஸ்டிராங்தான் என்றார் கடை உரிமையாளர்.
இன்ஸ்பெக்டருக்கு கோபம் வந்தது. ஏங்க சுவரில் துளை போட்டு திருடும் திருடன் எத்தனை சுவரை பார்த்திருப்பான். உங்க கடை சுவரை எளிதா துளை போட்டவுடன் அதன் தரத்தை புரிஞ்சிக்கிட்டான்.விரைவில் வேறு கட்டிடத்துக்கு போங்க என்று சொல்லிவிட்டு அந்த துண்டு பேப்பரை பையில்வைத்துக்கொண்டு வெளியே வந்து ஜீப்பில் ஏறினார்.யார் அந்த நலம் விரும்பி என்று யோசித்தபடி போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
வே.தபசுக்குமார்-தூத்துக்குடி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *