ஆழ்குழாய் கிணறும்…குழந்தையும் (சிறுகதை)
குழந்தை ரமேசுக்கு அன்று மூன்றாவது பிறந்த நாள்…
கணேசனும் கனகாவும் தங்கள் மகனின் பிறந்தநாளை காலையில் வீட்டில் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
உறவினர்கள் புடை சூழ ஹேப்பி பர்த்டே டூயூ என்று பாட்டுபாடி கேக் வெட்டினார்கள்.
குழந்தை ரமேசுக்கு கோவிலுக்கு சென்று மொட்டை போட்டிருந்தார்கள் அவன்.தலையில்தொப்பி மாட்டியிருந்தார்கள். அவன் கேக் வெட்டுவது போல் படம் எடுக்க அவன் கையில் சின்ன கத்தியை கொடுத்து போஸ் கொடுக்க சொன்னார்கள்.
அவன் கேக்கை எடுப்பதிலே குறியாக இருந்தான்.அங்கும் இங்கும் தலையை ஆட்டினான். கணேசன் தன்மகனின் கையைபிடித்துகத்தியால் கேக்கை வெட்ட அனைவரும் கைத்தட்டி வாழ்த்து சொன்னார்கள்.
புகைப்படக்காரர் ம்…அப்படியே இருங்க…குழந்தை முகத்தை தொப்பி மறைக்குது. கொஞ்சம் தொப்பியை தூக்கிவிடுங்க என்றார். கணேசன் அந்த தொப்பியை தூக்கிவிட்டார்.
மீண்டும் கேக் வெட்டுமாறு போஸ்கொடுங்க…என்று புகைப்படக்காரர் சொல்ல கணேசனும் குழந்தையும் போஸ் கொடுக்க காமிரா கிளிக்செய்தது.
அனைவருக்கும் கணேசன் கேக் எடுத்து கொடுத்தார்.
குழந்தை ரமேஷ் புத்தாடையில் அனைவரையும் கவர்ந்தான். கழுத்தில் தங்க சங்கிலி, கையில் பிரேஸ்லெட் பளபளத்தது. குழந்தை ரமேசுக்கு பரிசு பொருள்களை வழங்கி முத்தமிட்டார்கள் உறவினர்கள்.
முத்தமழையில் நனைந்த குழந்தையை கனிவுடன் பார்த்த கணேசனுக்கு கண்களின் ஓரத்தில் ஆனந்த கண்ணீர்…பத்துவருட தவத்துக்கு பின் பிறந்த குழந்தை ரமேஷ். அவனை அள்ளி அணைத்து மாரி மாரி முத்தமிட்டான்.
பிறந்த நாள்விழாவுக்கு வந்தவர்களுக்கு கேசரி, இட்லி, பொங்கல் பரிமாறப்பட்டது.
குழந்தை ரமேஷ் அங்கே வந்த சிறுவர்களுடன் விளையாடுவதில் மும்முரமானான். விழா பந்தலுக்குள் சுத்தி சுத்தி ஓடிவந்தான்.
கனகாவும் கணேசனும் உறவினர்களை வரவேற்று அவர்களை உபசரிப்பதில் மும்முரமாக இருந்தார்கள்.
குழந்தை ரமேஷ் கையில் ஒரு பலூன் கிடைத்தது. அவன் பலூன் நூலை கையில் வைத்து அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டிருந்தான். அந்த பலூன் திடீரென்று அவன் கையை விட்டு பறந்தது. அவன் அதை எடுக்கும் ஆவலில் அங்கும் இங்கும் ஓடினான். பலூன் பந்தலை விட்டு பறந்த போது அவனும் பந்தலைவிட்டு வெளியே சென்றான். அதை யாரும் கவனிக்கவில்லை.
உறவினர்கள் ஒவ்வொருவராக விடைபெற்று சென்றார்கள். கணேசன் எல்லோரையும் புன்னகையுடன் வழியனுப்பிவிட்டு குழந்தை ரமேசை தேடினார். காணவில்லை .
கனகாவிடம் நிற்பான் என்று நினைத்து வீட்டுக்குள் சென்று கனகாவை தேடினார். உறவினர் பெண்ணுடன் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்த கனகாவிடம் ரமேசை எங்கே என்று கேட்டார்.
அதற்கு கனகா..ஏங்க உங்க கிட்டதானே நின்னான்.எங்க விட்டிங்க அவனை.ஒரு இடத்திலே அவன் நிக்க மாட்டானே…என்று கத்தினார்.
பிள்ளையை பாக்காம….நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்தே என்று பதிலுக்கு கணேசன் கத்தினார். மாற்றி மாற்றி இருவரும் கத்த அந்த இடம் பரபரப்பானது.
உறவினர் ஒருவர் அவர்களை அதட்டினார். இரண்டு பேரும் சத்தம் போடாதீங்க…ரமேஷ் இங்கேதான் இருப்பான்..நல்லா தேடுங்க…எங்கே போயிடப்போறான்..என்றார்.
வீடு முழுவதும் தேடினார்கள். கிடைக்கவில்லை. வீட்டுக்கு பின்னால் போயிருப்பானா… ரமேசின் செருப்பு அங்கே கிடந்தது.
அதை பார்த்ததும் கணேசனுக்கு குப் என்று வியர்த்தது. வீட்டுக்கு பின்னால் தோட்டம்…கிணறு…இருந்தது. மணல் பாதையில் குழந்தையின் கால்தடம் தெரிந்தது.
அதை பார்த்ததும் கனகா..அய்யோ…என் குழந்தை என்று கத்தினார். உறவினர் அமைதிபடுத்தினார். குழந்தைக்கு ஒண்ணும் ஆயிருக்காது…தோட்டத்திலதான் இருப்பான்..சீக்கிரம் தேடுங்க…என்று அவசரப்படுத்தினார்.
கணேசன் அந்த தடங்கள் இருந்த பாதை வழியாக வேகமாக நடந்தான். கனகாவும் அழுதபடியே பின்னால சென்றார். சிறிது தூரம் சென்றதும் பாதையில் சிறுவனின் கால் தடம் தெரியவில்லை.
கணேசன் திணறினார். பாதையைவிட்டு குறுக்கு பாதை ஒன்று சென்றது. அங்கே கால்தடம் தெரிய அந்த பாதை வழியாக சென்றார். இவ்வளவு தூரம் எப்படி வந்திருப்பான். யாராவது நகையை பறிக்க அவனை இங்கே ஏமாத்தி கூப்பிட்டுட்டு வந்து இருப்பாங்களா..தெரியலையே..
கணேசனுக்கு நெஞ்சு பக் பக் என்று அடித்தது.
கனகா அழுகையை அடக்கிக்கொண்டு பின்னால் நடந்தார். சாமி என் பிள்ளையை காப்பாத்து என்று ஏங்கினார்.உறவினர் சிலரும் பின்னால் நடந்து வந்தார்கள்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு மரத்தின் அடியில் குழந்தை ரமேஷ் அழுதுகொண்டு நின்றான். அவன் அருகில் கிழிந்த கால்சட்டையும் மேல் சட்டையும் போட்டிருந்த ஒரு ஏழை சிறுவனும் நின்று கொண்டிருந்தார்கள்.
குழந்தை ரமேசின் தொப்பி தனியாக கிடந்தது.: அதை பார்த்ததும் கணேசன்…ஆ…ரமேஷ்…கிடைச்சிட்டான் என்று கத்தியவாறு அங்கு ஓடினார்.
பின் தொடர்ந்து கனகாவும் மற்றவர்களும் ஓடினார்கள்.அழுது கொண்டு நின்ற குழந்தை ரமேசை கண்ணீர் ததும்ப வாரி அணைத்து தூக்கினார்.
அவன் கையில் பிரேஸ்லெட்டு மற்றும் கழுத்தில் தங்கசங்கிலி இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.
குழந்தையின் அருகில் நின்ற நான்கு வயது சிறுவனை கணேசன் முறைத்து பார்த்தார். சட்டை கிழிந்து காணப்பட்ட அந்த சிறுவனின் தோற்றம் அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நகையை பறிக்க அந்த சிறுவன்தான் குழந்தை ரமேசை அங்கே கூட்டிட்டு வந்திருக்கணுமுன்னு அவர் நினைத்தார்.
யார்ரா நீ என்று அந்த சிறுவனிடம் கோபத்துடன் கேட்டார். அவன் பதில் சொல்லாமல் நின்றான். கணேசன் அவன் கன்னத்தில் ஓங்கி அறை விட்டான்.அவன்…கண்ணீர் சிந்தியவாறு..நாக்கை நீட்டி தான் வாய் பேசமுடியாதவன் என்பதை சைகையால் சொன்னான்.
என்ன ஏமாத்திறியா என்று மீண்டும் அவன் கன்னத்தில் அறைந்தார்.
தொப்பி சிறிது தூரம் தள்ளி கிடந்ததை குழந்தை காட்டி ஊ…ஊ…என்றது.அருகில் ஒருபலூன் செடியில் நூலுடன் சிக்கியிருந்தது. ம்…இந்த பலூனை காட்டித்தான்…இங்கே கூட்டிட்டு வந்திருக்கான் என்று அந்த சிறுவன் மேலே கணேசன் ஆத்திரம் அடைந்தார்.
அவனை அடிக்க பாய்ந்தார். குழந்தையை வாங்கிய கனகா ஏங்க…அந்த சின்னபையனை அடிக்காதீங்க…நமக்கு நம்ம பையன் கிடைச்சிட்டான்ல. விடுங்க…என்றார்.
கணேசன் அடங்கவில்லை. போலீசில் பிடிச்சு கொடுத்தாதான் சரிப்படும்…என்று கத்தினார். குழந்தை ரமேஷ் அந்த தொப்பியையும் பலூனையும் காட்டி ஊ…ஊ..என்றது.கணைசன் செடியில் சிக்கிய பலூனை எடுத்து கொண்டு அருகில் கிடந்த தொப்பியை தூக்கியவர்..ஆ என்று அலறினார்.மூடப்படாமல் கிடந்த ஆழ்குழாய் கிணறு குழாயை அந்த தொப்பி மூடியிருந்தது தெரிந்தது.
அந்த குழாயினுள் குழந்தை விழுந்திருந்தால் என்ன ஆயிருக்கும்.இந்த தொப்பி அந்த குழாயை மூடியிருந்ததால் குழந்தை தப்பிச்சது..என்று கணேசன் சொன்னார்.
அழுது கொண்டு நின்ற ஏழை சிறுவனை கோபம் பொங்க பார்த்தார். உறவினர் ஒருவர் கணேசனை பார்த்து ஏம்பா..தப்பு உன் மேலத்தான் இருக்கு. ஆழ்குழாய் கிணறு தோண்டி அதிலே தண்ணி இல்லன்னா அப்படியே போட்டுறதா.
ஒரு சின்ன மூடி போட்டு மூடுறதுக்கு என்ன குறைச்சல்.எல்லாம்..ஒரு அலட்சியம்..முதல்ல..அந்த குழியை மூடு என்று கத்தினார்.கணேசன் உடனே.. எல்லாத்துக்கும் இந்த சின்னப்பையன்தான் காரணம்…அவன்தான் என்மகனை இங்கே கூட்டிட்டு வந்திருக்கான் என்று பதிலுக்கு கத்தினார்.
உறவினர் அந்த ஆழ்குழாய் கிணறின் வாய் பகுதியில் ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்து மூடினார். கணேசா…இந்த கிணறை நிரந்தரமா மூடுறதுக்குரிய வேலைய பாரு.இன்னைக்கு உன் மகன் புழைச்சது கடவுள் புண்ணியம் .அலட்சியமா மறந்துபோனா அது நாளைக்கு நமக்கு எமனா மாறிடும் .
லட்சக்கணக்குல செலவு செஞ்சு ஆழ்குழாய் கிணறு தோண்டுறீங்க….அந்த கிணறு சரியில்லன்னா ஒரு ஐம்பது ரூபாய் செலவு செஞ்சு மூடமாட்டிங்க …என்று சத்தம் போட்டபடி அங்கிருந்து சென்றார்.
கணேசன் தன் தவறை உணர்ந்தபடி குழந்தையை பாசமாக பார்த்தார்.அழுது கொண்டிருந்த ஏழை சிறுவனை பார்த்து ஏய்…ஓடுறா…உன்னை இங்கே எங்கேயும் பார்த்தேன். தொலைச்சிடுவேன் என்று அவனை விரட்டினார்.
அவன் அழுது கொண்டே அங்கிருந்து சென்றான்.அந்த அனாதை சிறுவன் செய்த உதவி யாருக்கு தெரியும். குழந்தை பிறந்த நாள்விழாவில் மீதி இருந்த இட்லி கேசரியை பிச்சைக்காரர்களுக்கு வழங்கியதை வாங்கி சாப்பிட்ட அனாதை சிறுவன் பலூன் பறந்த திசையை நோக்கி நடந்த குழந்தையை பின்தொடர்ந்து சென்று அந்த குழந்தை மூடப்படாத ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து விழாமல் இருக்க அதன் தொப்பியை எடுத்து அந்த குழியை மூடியது அவனுக்கு மட்டுமே தெரியும்.
வாய்பேச முடியாத அவனால் …கண்ணீர் தான் விடமுடிந்தது. கணேசனும் கனகாவும் இதை அறியாமல் குழந்தையை தக்க நேரத்தில் தாங்கள் காப்பாத்தியதாக உறவினர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
வே.தபசுக்குமார்-தூத்துக்குடி