• February 7, 2025

மாணவி ஸ்ரீமதி உடல் அடக்கம்: என் மகளின் மரணத்தில் நீதி கிடைக்கும் – தந்தை உருக்கம்

 மாணவி ஸ்ரீமதி உடல் அடக்கம்: என் மகளின் மரணத்தில் நீதி கிடைக்கும் – தந்தை உருக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி மரணமடைந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இது தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோர்ட்டு உத்தரவால் மாணவியின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் சற்றுமுன் அடக்கம் செய்யப்பட்டது. இதன்காரணமாக காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் உள்ளது. பாடப் புத்தகத்தோடு மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மாணவியின் தந்தை ராமலிங்கம்


மாணவி ஸ்ரீமதியின் உடலோடு பாட புத்தகம் சேர்த்து கட்டப்பட்டது. அவர் மருத்துவ படிப்பை தேர்வு செய்ய எண்ணியிருந்தார். இதனால் அவரது ஆசையை நிறைவேற்ற உயிரியல் புத்தகம் மாணவியின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது. இது காண்போரின் கண்களில் கண்ணீரை வரச் செய்தது. முதல் முறையாக இந்த மயானத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். மயானத்தில் நடைபெற்ற இறுதி சடங்கில் அமைச்சர் கணேசன், அ.தி.மு.க. எம்எல்ஏ அருண்மொழி தேவன் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம் கூறியதாவது:-
நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கின்றேன். அவள் மரமாக வளர்ந்து இதற்கு காரணமானவர்களை வேரறுப்பாள்; இனியும் இது போன்ற சம்பவம் எந்த மாணவிக்கும் நடைபெறக்கூடாது.
என் மகள் மரணத்தில் பள்ளி தாளாளர், அவரது மனைவி, மகன்கள், பள்ளி ஆசிரியைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் குற்றவாளிகள்; அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். தமிழக அரசு தற்போது வேகமாக வழக்கை விசாரித்து வருகிறது. நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *