கடலோரத்தில் கன்னி உடல்…(சிறுகதை)
சென்னை திருவான்மியூர் கடற்கரை ஓரம்…
அலைகளின் கரங்கள்.. அங்கே நின்றவர்களின் கால்களை தொட்டு சென்றன.
வாக்கிங் சென்ற சிலரும்..வாக்கிங்கை நிறுத்திவிட்டு அலைகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அலைகள் நழுவி உள்ளே சென்றபோது…அந்த மஞ்சள் நிற சேலை…கடற்கரை மணலில் பரவிகிடந்தது. அருகில் சாய்ந்து கிடந்த நிலையில் கன்னிப்பெண் உடல்…முகம் சரியாக தெரியவில்லை.
கார்மேக கூந்தல் முகத்தை பாதி மறைத்திருந்தது…வாக்கிங் வந்த முதியவர்..யார் அந்த பொண்ணு…என்னாச்சு..கடலில் குதிச்சிட்டா…இல்லை தவறி விழுந்துட்டா.. என்று அங்கு நின்றவர்களிடம் கேட்டார்.
அதற்கு ஒரு பெண்..யாருக்கு தெரியும் பெரியவரே ….ஏதாவது காதல் பிரச்சினையோ..குடும்ப பிரச்சினையோ யாருக்கு தெரியும்….என்று பெருமூச்சுவிட்டார்.
எங்கும் வேலை பாக்கிற பொண்ணா இருக்குமா இல்லை காதலனோடு சுற்றுலா வந்த பெண்ணா இருக்குமோ..ஒண்ணும் சரியா தெரியல…என்று அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர்…
காக்கைகள்…கா,கா என்று கரைந்தபடி அந்த இடத்தை வட்டமிட்டன. அலைகளின் சீற்றம்..அதிகமாகவே இருந்தது. அங்கே கூடி நின்ற சிலர் இது கொலையாகத்தான் இருக்கும். கொன்று கடலில் தூக்கிப்போட்டுட்டு போயிருப்பானுக… போலீஸ் வந்துரும் நம்மக்கிட்டதான் யாரு என்ன விவரமுன்னு கேட்பாங்க….நமக்கு ஒண்ணும் தெரியாது..என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே…
இன்ஸ்பெக்டர் ராஜன் போலீசாருடன் அங்கு விரைந்து வந்தார். அவரை கண்டதும் வாக்கிங் வந்தவர்கள் சிதறி ஓடினார்கள். பெண்ணின் உடல் கிடந்த பகுதிக்கு இன்ஸ்பெக்டர் செல்ல உடன் இரண்டு பெண் போலீசும் சென்றார்கள்.
பெண்ணின் உடலை பெண்போலீசார் புரட்டிப் பார்த்தனர்.உடலில் காயங்கள் எதுவும் தெரியவில்லை. கழுத்தில் சின்ன தங்க செயின் மின்னியது.
சிவந்த நிறம். கட்டான உடல். எடுப்பான தோற்றம். பதினெட்டு வயதிருக்கும். யார் அந்த பெண்…தெரியவில்லை.
போலீஸ் போட்டாகிராபர் பல கோணங்களில் படம் எடுத்தார்.
கடற்கரை ஓரத்தில் உள்ள ஓட்டல்களில் காதல்ஜோடிகள் யாரும் தங்கியிருந்தார்களா..என்று விசாரணையை போலீசார் தொடங்கினார்கள்.
கடற்கரையில் கிடந்த பெண்ணின் உடலை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல வேன் வந்தது. வேனில் அந்த உடலை ஏற்ற முயன்றபோது பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை நோக்கி ஒருகரம் நீண்டது. உடனே அந்த பெண் அந்த கரத்தை எட்டிப்பிடிக்க.. தூரத்தில் நின்று கொண்டிருந்த டைரக்டர்…கட் கட் என்று சத்தம் போட்டபடி ஓடி வந்தார்.
என்னம்மா … பிணமா நல்லா நடிச்ச…கடைசியிலே சொதுப்பிட்டிய…என்று சத்தம் போட்டார். அதற்கு அந்த துணை நடிகை…சார் நீங்க காட்சி சொல்லும்போது நகையை பறிச்சிட்டு போவாங்கன்னு சொல்லலையே சார்…அதனால்தான் நான் கையை பிடிச்சிட்டேன்…என்று சொன்னார்.
டைரக்டர் நெற்றியில் கைவைத்தபடி முக்கியமான காட்சியே அதாம்மா கடலில் மூழ்கி இறந்த உன் கழுத்தில் கிடக்கிற தங்க சங்கிலியை பறிச்சிட்டு போனவனை ஆவியா பின் தொடர்ந்து சென்று எப்படி பலி வாங்கிற என்பதுதான் கதை. புரியாதா….என்றார்.
அப்பநான் பேயா என்று ஆவேசமானார் நடிகை. பேக்கப்..பேக்கப்..என்று அலறினார் டைரக்டர்.. அடே.சினிமா ஸ்கூட்டிங்கா..என்றபடி கூட்டம் கலைந்தது.
வே.தபசுக்குமார், தூத்துக்குடி