ஜடாயுவை போல் சிற்பிக்கும் முக்தி அளித்த விஜயராகவ பெருமாள்

 ஜடாயுவை போல் சிற்பிக்கும் முக்தி அளித்த விஜயராகவ பெருமாள்

காஞ்சீபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் திருப்புட்குழி என்ற திவ்யதேசம் அமைந்துள்ளது. அவ்விடத்தில் தான் ராமபிரான் ஜடாயுவுக்கு முக்தியளித்தார்.
அங்கு மரகதவல்லி தாயாருடன் கோயில் கொண்டிருக்கும் விஜயராகவ பெருமாள் அக்கோவிலில் ஜடாயுவுக்கு ஒரு தனிச் சன்னதி வழங்கியுள்ளார்.
கோவிலில் நடைபெறும் உற்சவங்களில் ஜடாயுவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது சன்னதியின் முன் நின்றுதான் அத்யாபகர்கள் திவ்யப் பிரபந்த பாராயணத்தைத் தொடங்குவார்கள்.
இவ்வாறு ஜடாயுவுக்கு முக்தியளித்தது மட்டுமின்றி உற்சவங்களின் போதும் அவருக்குச் சிறப்பு மரியாதை செய்யுமாறு எம்பெருமான் அருள்புரிந்திருக்கிறார்.
இந்தத் தல வரலாற்றைத் திருப்புட்குழியில் வாழ்ந்த ஒரு சொற்பொழிவாளர் தனது சொற்பொழிவில் கூற அதைக் கேட்டு அவ்வூரில் வாழ்ந்த ஒரு சிற்பி நெகிழ்ந்து போனார்.
ஜடாயுவைப்போல் தானும் இறைவனுக்கு தொண்டு செய்ய விரும்புவதாக அந்தச் சொற்பொழிவாளரிடம் கூறினார். அதற்கு அவர், “இந்த உலகத்தைப் படைத் து செதுக்கிய சிற்பி விஜயராகவப் பெருமாள் ஆவார். நாம் அனைவருமே அந்தச் சிற்பியின் கையிலுள்ள கருவிகளே. இந்த எண்ணத்துடன் நீ சிற்பத் தொழிலைச் செய்து வந்தால், நீ செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவனுக்கு நீ செய்யும் தொண்டாகவே அமையும். நீ செதுக்கும் சிற்பங்களைப் பார்ப்பவர்கள் உன்னைத் தான் பாராட்டுவார்களே ஒழிய உனது கருவிகளைப் பாராட்டுவதில்லை. எனவே கருவிகளான நாம் புகழை ஏற்காமல், எல்லாப் புகழையும் சிற்பியான இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும்” என்றார்.
அன்று முதல் இறைவன் என்னும் சிற்பியின் கையிலுள்ள கருவியாகத் தன்னை எண்ணித் தன் சிற்பத் தொழிலை செய்து வந்தார். விஜயராகவப் பெருமாளுக்கு புதிய குதிரை வாகனம் செய்ய வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. உயிரோடு இருக்கும் குதிரையில் இறைவன் பவனி வருவது போலத்தான் அமைக்கும் குதிரை வாகனம் இருக்க வேண்டும் என்று சிந்தித்தார்.
‘கீல்குதிரை வாகனம்’ என்று சொல்லப் படும் குதிரையை உருவாக்கினார். தலைப்பாகம், உடல்பாகம், வால்பாகம் என மூன்று தனித்தனி பாகங்களாகக் குதிரையை வடிவமைத்தார். மூன்றையும் இணைத்தால் முழுக் குதிரையின் உருவைப் பெறும்.
பெருமாளை அந்தக் குதிரை வாகனத்தில் கயிறுகளால் கட்டத் தேவையில்லை. பெருமாளின் திருமேனி கச்சிதமாக அந்த வாகனத்தில் தானே பொருந்திவிடும். அதில் எம்பெருமான் பவனி வருகையில் நிஜமான குதிரை தாவித் தாவி செல்வது போலத் தோன்றும்.
அக்குதிரை வாகனத்தைக் கண்டு வியந்த மக்கள் அந்தச் சிற்பியைப் பாராட்டினார்கள். சிற்பியோ, “இவ்வுலகையே செதுக்கிய சிற்பியான விஜயராகவப் பெருமாள்தான் அடியேனைக் கருவியாகக் கொண்டு இந்தக் குதிரையை செதுக்கியுள்ளார்!” என்று பணிவுடன் கூறினார்.
இதைக்கண்ட அவ்வூர் ஜமீன்தாரர், தான் கட்டிக் கொண்டிருந்த மற்றொரு கோவிலுக்கும் அவ்வாறே கீல் குதிரை வாகனம் அமைத்துத் தருமாறு சிற்பிக்குக் கட்டளையிட்டார்.
ஆனால் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளிடமே ஏகாந்த பக்தி கொண்டிருந்த சிற்பி மறுத்துவிட்டார். தன் ஏவலாட்களை அனுப்பி அந்தச் சிற்பியை இழுத்து வரச் சொன்னார்.

அவர்களும் பலவந்தமாகச் சிற்பியைப் பல்லக்கில் வைத்து அழைத்து வந்தனர். வரும் வழியில், பல்லக்கில் இருந்த சிற்பி, “விஜயராகவா நான் உன்னுடைய சொத்து, நான் உனக்கே உரியவன். உன்னைத் தவிர இன்னொருவருக்கு என் சிற்பக் கலையை அர்ப்பணிக்க மாட்டேன். அதனால் என்னைக் கொண்டு சென்றுவிடு!” என்று மனமுருகி வேண்டினார்.
அவரது வேண்டுகோளை ஏற்ற திருமால், அடுத்த நொடியே அவருக்கு முக்தி அளித்து விட்டார். ஜமீன்தாரின் வீட்டை அடைந்த ஏவலாட்கள் பல்லக்கிலிருந்து சிற்பியின் சடலத்தைத்தான் இறக்கினார்கள்.
ஜடாயுவுக்குத் திரேதா யுகத்தில் முக்தியளித்த விஜயராகவன், கலியுகத்தில் அந்தச் சிற்பிக்கும் முக்தியளித்துவிட்டான்.
வருடா வருடம் மாசி மாதம் திருப்புட்குழியில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் எட்டாம் திருநாள் அன்று அந்தச் சிற்பி சமர்ப்பித்த கீல்குதிரை வாகனத்தில் பவனி வரும் விஜயராகவப் பெருமாள், அந்தச் சிற்பியின் வீட்டுக்கே எழுந்தருளி அந்தச் சிற்பியின் குடும்பத்தினருக்கும், அவரது கருவிகளுக்கும் அருட்பாலிக்கிறார்.

அன்றைய தினம் அத்யாபகர்கள் அந்தச் சிற்பியின் வீட்டு வாசலில்தான் திவ்யப் பிரபந்த பாராயணத்தைத் தொடங்குவார்கள்.
ஜடாயுவுக்கு முக்தியளித்தது மட்டுமின்றி உற்சவங்களின் போதும் அவருக்குச் சிறப்பு மரியாதை செய்யுமாறு அருள்புரிந்தது போல, உலகுக்கே சிற்பியான திருமால், தன் பக்தனான சிற்பிக்கு முக்தியளித்தது மட்டுமின்றி வருடா வருடம் பிரம்மோற்சவத்தில் சிறப்பு மரியாதையும் செய்கிறார்.

‘த்வஷ்டா’ என்றால் சிற்பி என்று பொருள். இவ்வுலகையே செதுக்கி வடிவமைத்த சிற்பியானபடியால் திருமால் த்வஷ்டா என்றழைக்கப் படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 52 வது திருநாமம். “த்வஷ்ட்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வந்தால், நம் வாழ்வையும் நல்ல முறையில் எம்பெருமான் செதுக்கித் தருவான்.

ஓம் நமோ நாராயணாய….
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
தொகுப்பு: காசி விஸ்வநாதன், திருநெல்வேலி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *