தூத்துக்குடியில் நெய்தல் கலைவிழா 7-ந்தேதி தொடக்கம்; ஏற்பாடுகள் தீவிரம்
தமிழகத்தின் தனித்துவத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், ஸ்பிக் நிறுவனமும் இணைந்து ‘நெய்தல்- தூத்துக்குடி கலை விழா’ என்ற விழாவை நடத்துகிறது.
இந்த விழா வருகிற 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கலை விழா நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 300 கிராமிய கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு குழுக்களாக கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
இந்த கலை விழாவில் உணவுத்திருவிழாவும் நடத்தப்படுகிறது. இதற்காக சுமார் 20 உணவு சார்ந்த அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையிலான அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.
இதனை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று விழா நடக்கும் இடத்துக்கு கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் நேரில் சென்றனர், மேடை அமைக்கும் பணியை அவர்கள் பார்வையிட்டனர்.