• April 20, 2024

27 தலைமுறை பாவங்கள் ,தோஷம் நீக்கும் காட்டுராமர் கோவில்

 27 தலைமுறை  பாவங்கள் ,தோஷம் நீக்கும் காட்டுராமர் கோவில்

திருநெல்வேலி சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும், தாழையூத்தில் இருந்து 3 கிலோமிட்டார் தூரத்திலும் உள்ளது அருகன்குளம். இந்த கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதி ‘அருகன் குளம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது, சீதையை ராவணன் கடத்தினான். சீதையை ராவணன் கடத்துவதை அருகன்குளம் பகுதியில் வைத்துப் பார்த்த ஜடாயு என்ற கழுகு அரசன், ராவணனை தடுத்து நிறுத்தினான். இதனால் ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் போர் ஏற்பட்டது.

காட்டு ராமருக்கு பூஜை


தாபிராட்டியை அபகரித்துக் கொண்டு போக எத்தனித்த ராவணனோடு யுத்தம் புரிகிறான் ஜடாயு என்னும் கழுகரசன். போரில் தன்னுடைய இறக்கைகள் இரண்டையும் இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இந்த நிகழ்வை ராமபிரானிடம் தெரிவிக்கும் வரையிலாவது தான் உயிரோடு இருக்க வேண்டும் என்று ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான்.
சீதையைத் தேடி கானகத்தில் அலைந்து கொண்டிருந்த ராமரும், லட்சுமணரும் அந்த வழியே வந்தபோது துடித்துக்கொண்டு இருந்த ஜடாயுவை பார்த்தனர். உடனே ராமர், ஜடாயுவை தனது மடியில் தூக்கிவைத்து தடவிக்கொடுத்தார். அப்போது ஜடாயு, சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் செல்கிறான் என்ற தகவலை சொல்லியது. மேலும் தான் இறந்ததும் இறுதிச்சடங்கை ராமர் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்து விட்டு இறந்தது.

காட்டு ராமர் சன்னதி


அதன்படி ஜடாயுவுக்கு, தாமிரபரணி ஆற்றங் கரையில் இறுதிச்சடங்கு செய்தார், ராமபிரான். அப்போது ஜடாயுவுக்கு தீர்த்தம் கொடுப்பதற்காக ஜடாயு தீர்த்தத்தை உருவாக்கி அதில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தார். ஜடாயுவுக்கு ராமரே மகனாக இருந்து தர்ப்பணம் கொடுத்த இடம், தாமிரபரணி நதிக்கரையில் ‘ஜடாயுத்துறை’ யாக இன்றும் அழைக்கப்படுகிறது.
ஜடாயுவுக்கு இறுதிச்சடங்கு செய்த ராமர், அவருக்கு மோட்சம் கிடைக்கவேண்டும் என்பதற்காக தாமிரபரணி நதிக்கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த லிங்கம் தான் இத்தலத்தில் அருள்பாலிக்கும் ராமலிங்க சுவாமி ஆகும். இந்த ஆலயத்தில் ராமலிங்க சுவாமி மூலவராக உள்ளார். இக்கோவிலில் தாயார் சீதாதேவி, தம்பி லட்சுமணன் ஆகியோருடன் ராமபிரான் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். வெளி மணிமண்டபத்தில் பர்வதவர்த்தினி அம்பாள், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி சன்னதிகளும் உள்ளன. மூலவருக்கு வடக்கு பகுதியில் தனிக் கோவிலாக ஜடாயுவுக்கு பிண்டம் போட்ட ‘பிண்ட ராமர்’ உள்ளார்.

ஆஞ்சநேயர் சன்னதி


இந்தக் கோவில் பிற்காலத்தில் வல்லபாண்டிய மன்னரால் சீரமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளன. ஆலயத்தின் அருகில் ஜடாயு தீர்த்தம், ராம தீர்த்தம், சிவ தீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்களும் உள்ளன. இந்த தீர்த்தங்களின் அருகில் லட்சுமி நாராயணர் கோவிலும், காட்டு ராமர் கோவிலும், எட்டெழுத்து பெருமாள் கோவிலும், கோசாலையும் அமைந்திருக்கின்றன. இந்த 3 தீர்த்தங்களும் ராமர் ஜடாயுவுக்கு இறுதிச்சடங்கு செய்த ஜடாயுத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.

ஜடாயு தீர்த்தம்


இதனால் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் புனித நீராடிவிட்டு ராமலிங்க சுவாமியையும், பிண்ட ராமரையும் வழிபட்டால், நமது குடும்பத்தில் உள்ள 27 தலைமுறையினர் செய்த பாவங்களும், தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் இந்த ஜடாயுத்துறைக்கு வந்து தர்ப்பணம் கொடுத்து சுவாமியை வழிபட்டால், தோஷங்கள் நீங்கி குடும்பம் முன்னேற்றம் அடையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கும், ராமருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஜடாயு தீர்த்தத்தின் மகிமை பற்றி வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையில் இப்புண்னியதீர்த்தம் சிவா தீர்த்தம், இராமதீர்த்தம், ஜடாயுதீர்த்தம் என்பதினால் முந்நீருற்று என்றும் நன்னீரூற்று என்றும் அழைக்கப்படுகிறது, இப்புண்ணிய தீர்த்தம் நோயை தீர்க்க வல்லதாகவும், பாவத்தை போக்க வல்லதாகவும் மோட்சத்தை அடையக்கூடியதாகவும் அமைந்துள்ளது, என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும் பக்தர்கள் அனைவரும் இத்தீர்த்தத்தில் ஒரு வாளி தண்ணீர் ஊற்றி கொள்ளவும். முக்கியமாக சுவாமி மீது ஒருவரும் தண்ணீர் ஊற்றவேண்டாம் என்று கூறப்பட்டிருக்கிறது,


ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் ஏராளமானவர்கள் இங்கு வந்து ஜடாயுத்துறையில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு, இத்தல இறைவனையும் வழிபடுகிறார்கள். இந்த கோவிலில் உள்ள கல் விளக்கில் இலுப்பை எண்ணெயும், நல்லெண்ணெயும் கலந்து ஊற்றி விளக்கு ஏற்றினால் குடும்ப தோஷம் நிவர்த்தியாகும். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6.30 மணி இந்த ஆலயம் உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து கோவிலுக்கு சென்று வர மினிபஸ் இயக்கப்படுகிறது. நெல்லை சந்திப்பு, தாழையூத்தில் இருந்து ஆட்டோவில் சென்று வரலாம். கோவில் அருகில் சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்கின்ற தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கோவில்பட்டி பகுதியில் இருந்து செல்லவேண்டுமானால் தாழையூத்து சிமெண்டு ஆலை தாண்டி நாரணம்மாள்புரம் ஆற்று பாலத்துக்கு முன்பாக சர்வீஸ் ரோட்டில் சென்று பாலத்தின் கீழ்புறத்தில் வலதுபுறம் திரும்பி சிறிது தூரம் கிராம சாலையில் சென்றால் ஜடாயு தீர்த்தம், கோவில்கள் அடுத்தடுத்து வரும்.

தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தினமும் ஒருகால பூஜை, வைப்பு நிதி உதவி பெறும் கோவிலாக இது அமைந்துள்ளது,. கோவில் அர்ச்சகர் எஸ்.வெங்கடேசன் ஐயங்கார், தக்கார் ஸ்ரீதேவி, சரக ஆய்வாளர் ராமலட்சுமி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் உள்ளனர்.

S.K.T.S திருப்பதிராஜன்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *