• April 23, 2024

மார்க்கெட்டில் மாறுவேடம்…(சிறுகதை)

 மார்க்கெட்டில் மாறுவேடம்…(சிறுகதை)

நகரின் பெரிய மார்க்கெட்… கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரே இரைச்சல்… காய்கறிகள் வேனில் வந்து இறங்கி கொண்டிருந்தன.
அந்த மார்க்கெட்டின் வெளியே ஓரத்தில் காரை நிறுத்தினார் சாம்பசிவம். பெரும் பணக்காரர். ஆனால் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். பணக்காரர்கள் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து செல்வார். கையில் மோதிரம் கழுத்தில் தங்க சங்கிலி என்று பளபளப்பாக காட்சி தருவார். மற்ற இடங்களில் எளிமையாக இருப்பார். ஏன் என்றால் யாரும் பணம் கேட்டுவிடக்கூடாது என்ற முன் எச்சரிக்கை.
சரி கதைக்கு வருவோம்..
மார்க்கெட்டுக்குள் பணக்காரர் தோற்றத்தில் சென்றால் விலையை கூட்டி சொல்வார்கள். விலையை குறைத்து வாங்க முடியாது என்று சாம்பசிவம் நினைத்தார். லுங்கிக்கு மாறினார். கையில் ஒரு பையை எடுத்து கொண்டார். காரை பூட்டிவிட்டு சாவியை விரலில் மாட்டிக்கொண்டு… மார்க்கெட்டுக்குள் சென்றார்.
மூட்டைகளை தலையில் சுமந்து கொண்டு வியர்க்க விறுவிறுக்க..தொழிலாளர்கள் நடந்து சென்றனர். அவர்களுக்கு வழிவிட்டு சாம்பசிவம் ஒதுங்கினார்.
சேறும் சகதியாக கிடந்தது… மார்க்கெட்டை சுத்தமாக வைக்க மாட்டாங்க போலிருக்கு… லுங்கியை உயர்த்தி கட்டிக்கொண்டு நடந்தார் சாம்பசிவம்..
காய்கறி கடையை நெருங்கினார். என்னப்பா..காய்கறி எல்லாம் புதுசுதானே.. பழசை.. தண்ணி தெளித்து வச்சிருக்க போறீங்க..என்றார். கடைக்காரர்..எல்லாம் புதுசுதான்..காய்கறியெல்லாம் மணி மாதிரி இருக்கும்..நம்ம கடையிலே வாங்குறவங்க திருப்பி நம்ம கடைக்கே வருவாங்க..என்று அடுக்கி கொண்டே போனார்.
சாம்பசிவம்..சரி…சரி..ஒருகிலோ தக்காளி போடுங்க…உங்க கடையிலே விலை சீப்பா இருக்குமுன்னு எல்லோரும் சொன்னாங்க.. என்று சொன்னார். கடைக்காரர் சிரித்து கொண்டு..ம்..நாம நியாமா இருப்போம்ல….என்று சொல்லியவாறு தக்காளியை எடை போட்டார். சாம்பசிவம்..தராசு முள்ளையே பார்த்தார். சரியா எடை போடுவீங்கள்ள..என்று கேட்க..கடைக்காரர்..ஆமா..எல்லாத்தையும்.நல்லா எடைபோடுவோம்..என்று நமட்டு சிரிப்பு சிரித்தபடி சாம்பசிவம் கொண்டுவந்த பையில்..தக்காளியை போட்டார்.
ஒரு கிலோ சரியா இருக்குமில்ல..ம்..என்ன .இந்த தக்காளி நசுங்குன மாதிரி இருக்கு..இதை வச்சிக்கிட்டு வேற தக்காளி கொடுங்க..என்று கேட்டார். கடைக்காரர் நல்ல தக்காளி எடுத்து கொடுத்தார். இன்னும் இரண்டு தக்காளி கொடுத்தா குறைஞ்சா போவீங்க.கொடுங்க என்றார்.கடைக்காரர் சிறிதாக இரண்டு தக்காளியை எடுத்து போட்டார்.
சாம்பசிவத்துக்கு..மகிழ்ச்சி..சரி..கிலோ தக்காளி எவ்வளவு..என்று கேட்டார்.கடைக்காரர் விலையை சொன்னார்.சாம்பசிவம்..உஷாராகி..என்ன தங்கவிலையை சொல்லுறீங்க..குறைச்சு கொடுங்க..என்றார். கடைக்காரர் இரண்டு ரூபாய் குறைத்தார். சாம்பசிவம் புன்னகை செய்தபடி..தக்காளியை வாங்கிகொண்டு புறப்பட்டு சென்றார். அவர் சென்றபின்..கடைக்காரர் புன்னகை செய்தார். ஏன் அண்ணாச்சி சிரிக்கிறீங்க என்று கடைக்கார சிறுவன் கேட்டான்..
ஒண்ணுமில்லடா..வந்தவர் சாதராண ஆள் இல்லே..வசதியானவர்..என்றார் கடைக்காரர். சிறுவன் உடனே..எப்படி? லுங்கி உடுத்திட்டு..சாதாரணமா தான வந்தார்..எப்படி சொல்லுறீங்க..என்று கேட்டான். ஏய்..எளிமையா காட்டிக்கிட்டார். அவர விரலில் கார் சாவி இருந்ததை நீ பாக்கலையா..அவர் மறைச்சு வச்சிருந்தாலும் நான் பாத்துட்டேன். எங்கிட்ட.இருக்கிற மாதிரியே அவருக்கிட்டேயும் கார் இருக்கணும்..ஒரு தக்காளிக்கு இவ்வளவு பேரம் பேசுறாரு..என்று வியர்வையில் நனைந்த பனியனை இழுத்துவிட்டார்.
கடைக்காரரின் சாமர்த்தியதை நினைத்து சிறுவன்..மனதுக்குள் நகைத்து கொண்டான்.
சாம்பசிவம்.. லுங்கியை மடக்கி கட்டிக்கொண்டு..காரை நோக்கி நடந்தார். காரை நெருங்கியபோது..அவரை இரு கண்கள் கூர்ந்து பார்த்தது. சாம்பசிவம் காரை திறக்க முயன்றபோது மாறு வேடத்தில் இருந்த போலீஸ்காரரின் கை அவர் தோளை அழுத்தியது. சாம்பசிவம் திடுக்கிட்டு திரும்பி பார்த்தார். யாருய்யா..நீ என் தோளை அழுத்துற. எடுய்யா கையை என்றார்.
உடனே அவர்..யோவ் நான் போலீஸ் என்றார். சாம்பசிவம்..எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க..கிழிஞ்ச சட்டை போட்டுக்கிட்டு..போலீசுன்னு ஏமாத்திரியா என்று கேட்டார். அதற்கு அவர்..யோவ். நான் போலீஸ்தான்..மாறு வேடத்தில் இருக்கிறேன்.மார்க்கெட்டில் அடிக்கடி கார் திருட்டு போச்சு..அந்த திருடனை கண்டுபிடிக்க என்னை இன்ஸ்பெக்டர் நியமிச்சார். வசமா மாட்டிக்கிட்டியா..என்றார்.
சாம்பசிவம் திடுக்கிட்டார். யோவ்..நான் திருடன் இல்லைய்யா..பணக்காரன்..என்று சொன்னார். அவர் நம்பவில்லை.என்ன..ஏமாத்தலாமுன்னு பாக்கிறீயா..லுங்கி உடுத்துகிட்டு..சாதாரனணமா இருக்க..பணக்காரன் என்கிற..நடய்யா ஸ்டேசனுக்கு என்றார்.
சாம்பசிவம்..ஏங்க.லுங்கி உடுக்கிறது தப்பா..நான் போட்டிருக்கிறதும் மாறு வேடம் தான்..பணக்காரர் தோற்றத்தில் மார்க்கெட்டுக்குள் போனால் விலையை கூட்டி சொல்வாங்க குறைச்சு வாங்க முடியாது..அதான்..இப்படி லுங்கியோடு போனேன்.. இது என் கார்தான் என்று சொன்னார்.
அதற்கு ஆதாரம்..என்ன இருக்கு..என்று கேட்டார் போலீஸ்காரர். சாம்பசிவம் உடனே..இதோ பாருங்க என்னோட கார் சாவி. உள்ளே.நான் கொண்டு வந்த வேட்டி இருக்கு.வேணுமுன்னா பாருங்க..என்ற சாம்பசிவம் கார் கதவை திறந்ததார்.
உள்ளே போய் லுங்கியை கழற்றிவிட்டு வேட்டிக்கு மாறினார். அங்கே இருந்த கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு சாம்பசிவம் கீழே இறங்கினார். திகைத்துப்போன போலீஸ்காரர்..அவரை பார்த்து இனி மாறு வேடம் போடாதீங்க என்று எச்சரித்துவிட்டு..அவர் மாறு வேடத்தில் கார்திருடனை பிடிக்க கிளம்பினார்.
சாம்பசிவம்…தப்பித்தோம்..பிழைத்தோம் என்று வேகமாக காரை வீட்டுக்கு கிளப்பினார்…!
வே.தபசுக்குமார்,தூத்துக்குடி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *