• April 19, 2024

கொள்ளையர்களின் இறுதி முடிவு …(சிறுகதை)

 கொள்ளையர்களின் இறுதி முடிவு  …(சிறுகதை)

அந்த கடைவீதியில் போலீசார் வந்து குவிந்தார்கள்….துப்பறியும் மோப்ப நாய் விரைந்து வந்தது.

கடைவீதியில் இருந்த வட்டிக்கடைமுன் மக்கள் கூட்டம்..அந்தகடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நூறு பவுன் நகைகளை கொள்ளையடித்திருந்தார்கள். நகைகளை அடகுவைத்தவர்கள் நகை போச்சே என்று அழுதுகொண்டிருந்தார்கள். இன்ஸ்பெக்டர் சலீம் காரில் வந்தார்.அடகு கடையை சுற்றிவந்தார்.
எந்த கும்பலின் கைவரிசை இது…கையில் வைத்திருந்த லத்தியை சுழற்றியவாறு சிந்தனையை ஓடவிட்டார். அடகு கடைக்காரரிடம் விசாரணை நடந்தது. நைட்டு பத்து மணிக்கு கடையை பூட்டிவிட்டு போனேன்.. காலையிலே வந்துபார்த்தா கடை திறந்து கிடக்கு.. நகைகளை காணோம்…பெட்டி உடைஞ்சிகிடக்கு…யாரோ..கொள்ளையடிச்சிட்டுபோயிட்டாங்களே…அவர் புலம்பினார்.
யார்மேலேயும் சந்தேகம் இருக்கா…என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.
நேற்று மாலை இரண்டு வாலிபர்கள் செயினை அடகுவைக்க வந்தாங்க..அது நகை கிடையாது…கவுரிங்..சத்தம் போட்டு அவங்களை விரட்டிவிட்டேன்..அவங்க மேலதான் எனக்கு சந்தேகம் இரு
க்கு…அந்த வாலிபர்களுக்கு இருபது வயது இருக்கும்..ஆள் கட்டையாத்தான் இருந்தாங்க.. குறுந்தாடிவச்சிருந்தாங்க…என்று அடுக்கினார்.
அந்த வாலிபர்களின் அங்க அடையாளங்களை கேட்டதும்..இன்ஸ்பெக்டர் சிந்தனையில் ஒருவரைபடம் ஓடியது…எப்படியும் பிடிச்சிடலாம் என்று திட்டம் போட்டார். திருடிய நகைகளை நகைகடைகளில் தான் விற்க வருவாங்க…ஸ்கெச் போட்டு தூக்கிடலாம் என்று நினைத்தார்.
போலீஸ்நிலையத்துக்கு விரைந்தார். திருடர்களின் பட்டியலில் இருக்கும் புகைபடங்களை ஆய்வு செய்தபடி இருந்தார். சந்தேகப்படும்படியாக யார் நடமாடினாலும் தகவல் சொல்லும்படி இன்பார்மர்களை அலார்ட் பண்ணினார்.
அடகுகடையில் பதிவான ரேகைகளுடன் பழைய கொள்ளையர்கள் ரேகையை ஒப்பிட்டபோது..அந்த இரண்டு வாலிபர்களும் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய பலே கில்லாடிகள் என்பது தெரிந்தது. எப்படியாவது அவர்களை பிடித்தாக வேண்டும் என்று போலீஸ் தனிப்படை அமைத்து..சல்லடை போட்டு தேடினர்.
ஒரு தகவலும் கிடைக்கவில்லை. மூன்று நாளாகிவிட்டது. இன்ஸ்பெக்டர் டென்சனில் இருந்தார்..அப்போது ஒரு இன்பார்மர் வேகமாக ஓடிவந்தார்.. அய்யா..காட்டுக்குள்ளே இரண்டு வாலிபர்கள் செத்துக் கிடக்காங்களாம். பக்கத்திலே ஒரு பெட்டி கிடக்காம்…ஊர்மக்கள் தகவல் சொன்னாங்க..என்றார்.
சிறிதும் தாமதிக்காமல் இன்ஸ்பெக்டர் போலீஸ் படையுடன் அங்கே விரைந்தார். காட்டுபகுதியில் முள்புதருக்குள் இரண்டுவாலிபர்கள் பிணமாக கிடந்தார்கள். உடம்பில் காயம்…கட்டிபிடித்து சண்டைபோட்டிருப்பது தெரிந்தது. சட்டை கிழிந்திருந்தது. சுற்றி மது பாட்டில்கள் சிதறி கிடந்தன. பிரியாணி பொட்டலம் பிரித்தபடி கிடந்தது.

திறந்திருந்த பெட்டியில் நகைகள் தெரிந்தன. அடகு கடையில் கொள்ளையடித்த குறுந்தாடி வாலிபர்கள் அவர்கள்தான் என்று உறுதியானது.
இவர்கள் ஏன் இறந்தார்கள்…வேறு யாரும் தாக்கினார்களா…இவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டார்களா? என்று சிந்தனையை ஓடவிட்டார்.
தண்ணி அடிச்சிட்டு பிரியாணி சாப்பிடணுமுன்னு நினைச்சிருக்கானுவ…அப்புறம் என்ன ஆச்சு..சிதறிகிடந்த மல்லிகை பூ….மலந்து கிடந்த ஹைஹீல்ஸ் செருப்பு…. ஒரு கிளுகிளுகதை சொன்னது.
யார் கையிலும் சிக்காம இருந்த இரண்டு பேரும் ஒரு மல்லிகை பூவிடம் சிக்கி சின்னாபின்னமாகிட்டானுவ..என்று இன்ஸ்பெக்டர் யூகித்துகொண்டார். ஒரு ஜோடி செருப்பை தவறவிட்டு ஓடிய பெண் யார்…என்று அடுத்த கட்ட யோசனையில் இறங்கினார்.
தங்கத்தை பங்கு போடுவதில் கொள்ளையர் களுக்குள் வராத சண்டை, பெண்ணை பங்கு போடுவதில் வந்ததால் இறுதிமுடிவை தேடிக்கொண்டார்கள்.
வேன் வந்தது … கொள்ளையர்களின் உடல்கள் மார்ச்சுவரிக்கு கொண்டு செல்லப்பட்டன. நகைப்பெட்டியுடன் இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையம் விரைந்தார். உதிர்ந்து கிடந்த மல்லிகை பூவும் கவிழ்ந்து கிடந்த லேடிஸ் செருப்பும்..விசாரணை வளையத்துக்குள் வந்தது.

வே.தபசுக்குமார்-முள்ளன்விளை,தூத்துக்குடி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *