பாலியல் புகார் : துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவி இறக்கம்- கலெக்டர் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக .நாராயணன் என்பவர் இருந்தார்.
இவர் முன்னதாக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த போது தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இறுதி உத்தரவாக தற்போது வகிக்கும் பதவியிலிருந்து இரு நிலைகள் கீழ் இறக்கம் செய்யப்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பதவிஇறக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கலெக்டர் செந்தில்ராஜ் பிறப்பித்து உள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தனக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தலை துணிச்சலுடன் புகார் செய்ததை பாராட்டி, இதே போன்ற பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும்போது பிற பெண் அரசு ஊழியர்களும் தைரியமாக எதிர்த்து நிற்கும் வண்ணம் பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 பிரிவு 13 மற்றும் 15(அ) இன் படி குற்றம் புரிந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து ரூ.10 ஆயிரம் ஒரே தவணையில் பிடித்தம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்க கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.