கோவில்பட்டி புதுரோட்டில் வடிகால் அமைக்கும் பணி; அடுத்து என்ன செய்யவேண்டும்?
கோவில்பட்டி நகரில் மிக முக்கியமான சாலை புதுரோடு ஆகும். தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கும், சாத்தூர், சிவகாசி வழியாக வரும் வரும் வாகனங்கள் தூத்துக்குடி செல்வதற்கும் இந்த புதுரோடு தான் பிரதான சாலையாகும்.
இந்த சாலையில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள் அதிகம் உள்ளன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகளை பயமுறுத்தும். எந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுவார்கள்
பல மாதங்களாக படுமோசமாக இருந்த சாலையில் சில இடங்களில் சமீபத்தில் பேட்ஜ் ஒர்க்’ என்ற பெயரில் ஒட்டு போட்டு இருக்கிறார்கள். முழுமையாக சாலை போடவில்லை. பல்லாங்குழி சாலையாகவே காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் இறக்கத்தில் மழை நீர் தேங்குவதற்கு சாலையின் ஒரு புறத்தில் வடிகால் வசதி இல்லாததே காரணமாகும்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வடிகால் அமைக்கும் பணியை நகரசபை நிர்வாகம் கையில் எடுத்து உள்ளது. கடந்த ஒரு மாதமாக சாலையோரம் பள்ளம் தோண்டி சிமெண்டு தளம் அமைத்து பக்கவாட்டு கான்கிரிட் சுவர் எழுப்பும் பணி நடந்து வருகிறது.
இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த பணி முழுமை அடைந்து விடும். வடிகால் வசதி ஏற்படுத்தியவுடன் அடுத்து நகரசபை நிர்வாகம் என்ன செய்யவேண்டும்? வடிகால் போட்டாச்சு… மழை நீர் தானாக ஓடி சாக்கடையில் கலந்துவிடும் … இப்படி நினைத்து அப்படியே விட்டுவிடக்கூடாது.
நகராட்சி நிர்வாகம் அதிரடியாக களத்தில் இறங்கி சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றவேண்டும். அத்துடன் ஆக்கிரமிப்புகள் மறுபடியும் வராதபடி கண்காணிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது சாலை விரிவடையும். அந்த சமயத்தில் சாலை முழுவதும் தார்ச்சாலை அமைக்கவேண்டும். அதுவும் தரமானதாக இருக்கவேண்டும். இந்த பணியில் நகராட்சி நிர்வாகம் கறாராக இருக்கவேண்டும். அப்படியானால் தான் பெயருக்கு ஏற்றபடி இந்த சாலை `புதுரோடு’ என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ளும்.