பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஆகிறார் அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சியின் அடுத்த தலைவர் பொறுப்பை முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் ஏற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, திருவேற்காட்டில் வரும் 28ஆம் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இப்பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும், கடந்த 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவராக இருந்த ஜி.கே.மணி பா.ம.க. சட்டமன்ற கட்சி தலைவராக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.
10 மாவட்டங்களில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவை அடுத்து அவருக்கு தலைமைப் பதவி அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் வரும் 28ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கத்தில் நடைபெறுகிறது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் , இளைஞரணித் தலைவர் அன்புமணிஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார்.
பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.