தி.மு.க.உறுப்பினர்கள் ஆதரவுடன் குற்றாலம் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி மன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் இங்குள்ள 8 வார்டுகளில் தி.மு.க. 4 வார்டுகளிலும் அ.தி.மு.க. 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தன.
இரு கட்சிகளும் சம அளவில் வெற்றி பெற்றதால் தலைவர் பதவி யாருக்கு? என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் இந்த தேர்தலில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் 50 சதவீத உறுப்பினர்களுக்கு மேல் இருந்தால் தான் தேர்தலை நடத்த முடியும் என்ற விதியின்படி அதிகாரிகள் தேர்தலை ஒத்தி வைத்தனர்.
இதன் பிறகு இரண்டாவது முறையாக தேர்தல் நடைபெற்றது. அப்போதும் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று மீண்டும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. காலையில் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதற்காக பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் முத்து இளங்கோவன், மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் பிரான்சிஸ் ஆகியோர் தேர்தல் அலுவலர்களாக இருந்தனர்.
குற்றாலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி மாணிக்கராஜ், சுகாதார அலுவலர் ராஜகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 8 பேரும் கலந்து கொண்டனர். அப்போது தி.மு.க. சார்பில் கே.பி.குமார் பாண்டியன் அ.தி.மு.க. சார்பில் எம்.கணேஷ் தாமோதரன் ஆகியோர் போட்டியிட்டனர். உறுப்பினர்கள் மறைமுகமாக வாக்களித்தனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் கணேஷ் தாமோதரனுக்கு 5 வாக்குகளும் தி.மு.க. வேட்பாளர் குமார் பாண்டியனுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. எனவே கணேஷ் தாமோதரன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பிற்பகல் 2-30 மணிக்கு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கணேஷ் தாமோதரன், தங்கபாண்டியன், மாரியம்மாள், ஜெயா மற்றும் தி.மு.க.வை சேர்ந்த கோகிலா ஆகிய 5 பேர் மட்டும் கலந்துகொண்டனர். தி.மு.க. உறுப்பினர்கள் 3 பேர் வரவில்லை.
இந்த நிலையில் துணைத் தலைவருக்கு தங்கபாண்டியன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க.வில் இருந்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி தங்கபாண்டியன் வெற்றி பெற்றார்.
மதியம் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க. பெண் உறுப்பினர் கோகிலா வந்திருந்ததால் அவர் அ.தி.மு.க வுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது தெரியவந்துள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த குற்றாலம் பேரூராட்சி மன்றத்தை அ.தி.மு.க. கைப்பற்றி யதை தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை முடிவுக்கு வந்தது.