நரிக்குறவ பெண்களை தரையில் அமரவைத்து அன்னதானம்: கோவில் செயல் அலுவலர், சமையலர் வேலைநீக்கம்
![நரிக்குறவ பெண்களை தரையில் அமரவைத்து அன்னதானம்: கோவில் செயல் அலுவலர், சமையலர் வேலைநீக்கம்](https://tn96news.com/wp-content/uploads/2022/05/707639-women33.webp)
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தலசயன பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்விய தேசங்களில் 63-வது திவ்வியதேசம் எனப் போற்றப்படும் இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு அன்னதானம் சாப்பிட வந்த நரிக்குறவ இன மக்களைச் சாப்பிட விடாமல் கோவில் நிர்வாகத்தினர் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்த கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அன்னதான பாகுபாடு குறித்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நரிக்குறவ பெண்ணுடன் அமைச்சர் சமமாக உட்கார்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரடியாக சென்று அந்த நரிக்குறவ பெண்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில் மீண்டும் நரிக்குறவ பெண்களை தரையில் உட்கார வைத்து அன்னதானம் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து திருப்போரூர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கடந்த 24-ம் தேதி கோவிலில் முறையாக அன்னதானம் நடைபெறுகிறதா என ஆய்வு செய்தார். அப்போது 9 நரிக்குறவ பெண்களைத் தரையில் அமர வைத்து உணவு பரிமாறப்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கோவில் மேலாளர் சந்தானம் என்பவரை அழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமான முறையில் அன்னதானம் வழங்க வேண்டும் எனவும் எச்சரித்து சென்றார். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை ஆணையர் சேகர்பாவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அந்த கோவிலில் விசாரணை நடத்தினார். செயல் அலுவலர் சிவசண்முக பொன்னி, சமையலர் குமாரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)