பைக் டாக்ஸிக்கு எதிராக கோவில்பட்டியில் ஆட்டோ டிரைவர்கள் ஊர்வலம்


கோவில்பட்டி நகரில் பைக் டாக்ஸிகளை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி வட்டார ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ ஊர்வலம் நடந்தது.
கோவில்பட்டியில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பைக் டாக்ஸிக்கு அனுமதி தரக்கூடாது. பைக் டாக்ஸிக்கு சீருடை, எப்.சி., உரிமம், அரசாங்க முத்திரைகள் எதுவும் இல்லாததால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உதிரிபாகம் விலையேற்றம், காப்பீடு, எப்.சி., உரிமம் ஆகியவற்றின் கட்டண உயர்வால் ஆட்டோ தொழில் தத்தளித்து வரும் நிலையில், பைக் டாக்ஸிகளின் வருகையால் மேலும் பாதிப்படையும்.
எனவே, கோவில்பட்டி நகரில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ ஊர்வலம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி மேற்கு பூங்கா சாலையில் தொடங்கிய ஆட்டோக்கள் ஊர்வலம் பிரதான சாலை, புதுரோடு, கடலையூர் சாலை வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது.
அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் வட்டார செயலாளர் சுரேஷ்குமார், வட்டார தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி மாவட்ட செயலாளர்.பாபு தொடங்கி வைத்தார். ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் மாநில உதவி செயலாளர் பாலசிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், நகர துணைச் செயலாளர் விஜயலட்சுமி, நகர பொருளாளர் சீனிவாசன், நகர நிர்வாககுழு உறுப்பினர் முனியசாமி,நகர குழு உறுப்பினர் செல்லையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் முருகனிடம் கோரிக்கை மனு வழங்கினர். தொடர்ந்து அவர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்திலும் மனு வழங்கினர்.







