முதலமைச்சர் விஜய் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20ம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன் முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார். மேலும் சட்டசபையில் முதலமைச்சர் அமர்ந்திருப்பது குறித்தும் விமர்சனம் செய்தார்.

முதல்-அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக நிர்வாகிகள் ஆத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் பரவியது. இதையடுத்து, முன் ஜாமின் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஏன் இதுபோல பேச வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்கு வந்தபோது அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது காரில்
காவல் நிலையத்திற்கு வருவதாக கூறியதை ஏற்க மறுத்த போலீசார் காரில் இருந்து அவரை இறக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதனால் எஸ்.பி. அலுவலகத்தில் கூடிய ஆதரவாளர்களை (தி.மு.க.வினர்) வெளியேற அறிவுறுத்திய நிலையில், அவர்கள் வெளியேற மறுத்தனர்.
இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல விடாமல் தடுக்க முயற்சி செய்ததாக அவரது தி.மு.க.வினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.







