விஜயபாஸ்கர் ராஜினாமாவால் சட்டசபையில் அ.தி.மு.க. பலம் மேலும் குறைந்தது
கரூர் தொகுதியில் இருந்து முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதாகல் சட்டசபையில் அ.தி.மு.க. பலம் மேலும் குறைந்தது .

அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் மரகதம் குமரவேல், ஜெயகுமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகியோர், தங்களின் எம்.எல்.ஏ., பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர்.
அவர்களை தொடர்ந்து, கரூர் தொகுதி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று காலை தலைமை செயலகத்திற்கு வந்தார்.
சபாநாயகர் பிரபாகரை சந்தித்து, தன் பதவியை ராஜினாமா செய்வதாக எழுத்துப்பூர்வ கடிதம் அளித்தார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக விஜய பாஸ்கர் பதவி வகித்தார். அவர் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக, சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சட்டசபை விதி, 21ன்படி, கரூர் எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் தன் பதவி விலகல் கடிதத்தை, கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார். அவர் அளித்த பதவி விலகல் கடிதம், சட்டசபை விதிப்படி முறையாக உள்ளதால், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ராஜினாமா செய்துள்ள அ.தி.மு.க., – எம். எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை, முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ளார்.
இதனால், தமிழகத்தில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது. பதவியை ராஜினாமா செய்துள்ள விஜயபாஸ்கர், த.வெ.க.,வில் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது







