தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும்;சட்டசபையில் – கவர்னர் அர்லேகர் உரை
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி, கவர்னர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில், 17-வது சட்டசபையில் உரையாற்றுவதற்காக, காலை 9.50 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த கவர்னர் அர்லேகருக்கு, பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டசபை செயலாளர் சாந்தி ஆகியோர் கவர்னரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து, சிவப்பு கம்பளத்தில் நடந்தபடி, கவர்னர் அர்லேகர் சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு வருகை தந்தார்., காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் இருக்கைக்கு கவர்னர் அர்லேகர் வந்தார். அவருக்கு வலதுபுறம் உள்ள இருக்கைக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும், இடதுபுறம் உள்ள இருக்கைக்கு கவர்னரின் செயலாளர் சஜன்சிங் சவானும் வந்தனர்.

முதலில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழில் வணக்கம் தெரிவித்து, தனது உரையை கவர்னர் அர்லேகர் தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும். பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக சாதனை படைத்துள்ளது. விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவிற்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் விஜய்
மாநில உரிமை, பெண்கள் பாதுகாப்பு, நலன், சமூகநீதி, சமவாய்ப்பு ஆகியவை தவெக அரசின் அடிப்படை கொள்கைகள் ஆகும். இதனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும். போதைப் பொருளைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு படை அமைக்கப்படும்.
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். கோவை, மதுரை மற்றும் ஓசூரில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி அளிப்பார்கள் என நம்புகிறேன்.
தமிழக வெற்றிக் கழக அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும்.. பின்பற்றும்.. இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்பதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தவெக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
முந்தைய அரசின் தொழில் கொள்கைகளை தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கையை தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட உள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் இரட்டிப்பாகி, ரூ.10 லட்சம் கோடியை கடந்துள்ளது. இதனால் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் சுமை ஒரு லட்சம் ரூபாயைக் கடந்துள்ளது.
இவ்வாறு கவர்னர் அர்லேகர் கூறினார்.







