எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார்; அதிமுகவில் இருந்து சி விஜயபாஸ்கர் விலகல்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான சி. விஜயபாஸ்கர் இன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்
விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வான அவர் தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து, தன் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த நிலையில், சி. விஜயபாஸ்கர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர், அ.தி.மு.க.வில் இருந்து
பதவி விலகிய 5-வது எம்.எல்.ஏ. ஆவார். இதனால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 47-ல் இருந்து 42 ஆக குறைந்துள்ளது.
எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்த சி விஜயபாஸ்கர், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:
“கனத்த இதயத்துடன் அதிமுகவில் இருந்து விடைபெறுகிறேன். ஒரு கட்சியில் இருந்து அல்ல, வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தில் இருந்து விலகுகிறேன். வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில் உள்ளேன். மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்.

எனது இளமை, உழைப்பு, கனவுகள் அதிமுகவுடன் பின்னிப்பிணைந்தவை. மனமெல்லாம் தீராத வேதனையை சுமந்தபடி பயணிப்பது சரியாக இருக்காது. மகத்தான இயக்கத்தில் இருந்து மனவலியுடன் விலகுகிறேன். அதிமுகவின் தற்போதைய நிலை மிகுந்த வருத்தமளிக்கிறது”
இவ்வாறு சி விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.







