முதலமைச்சரை நேரில் சந்தித்து, ஒரு மாத ஆட்சிக்கு அன்புமணி பாராட்டு
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது தவெக அரசின் ஒரு மாத செயல்பாடுகளைப் பாராட்டியதுடன், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவர் அளித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சமீபத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்களின் விபரங்களை முதல்வர் விஜய்யிடம் அன்புமணி நேரில் கையளித்தார்.
முதல்வருடனான சந்திப்பிற்குப் பிறகு தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி கூறியதாவது:-
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் ஜூன் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிகழ்த்தப்படவிருக்கும் ஆளுநர் (கவர்னர்) உரையில் வெளியிடுவதுடன், அதற்கான அரசாணையையும் (GO) உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என்று முக்கியக் கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
தொடர்ந்து தவெக அரசின் ஓராண்டு காலத் தொடக்கச் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், “தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. இந்த ஒரு மாத காலத் தவெக ஆட்சி நன்றாகவே உள்ளது.
நிர்வாக ரீதியாக நிறைய நேர்மறையான மாற்றங்கள் வந்துள்ளன; குறிப்பாகப் பல்வேறு அரசுத் துறைகளில் ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது. புதிய அரசு என்பதால் இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் வரை நாம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். எனினும், தற்போதைய நிலையிலேயே பெரிய அளவில் நிறைய இடங்களில் ஊழல் குறைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் எந்தவொரு புதிய மின் திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. எனவே, தற்பொழுது ஆங்காங்கே ஏற்படும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு முந்தைய திமுக அரசே முழு முதற்காரணமாகும்.

மேலும், “மேகதாது அணை விவகாரம் என்பது தமிழகத்தின் மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினையாகும். எனவே, இப்பிரச்சினை தொடர்பாக விவாதிக்க மாநில அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டுள்ளேன்”
பாமக தலைவர் அன்புமணி கூறினார்..







