கோவில்பட்டி அருகே பைக்குகள் மோதல் : 2 பேர் பலி
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி மகன் அருண்பாண்டியன் (23). இவர் நேற்று இரவு நேரத்தில் இளம்புவனத்திலிருந்து கோவில்பட்டி நோக்கித் தனது பைக்கில் வந்துகொண்டிருந்தார்.

அதே நேரத்தில், சிதம்பராபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சுப்புராஜ் (36) கோவில்பட்டிக்கு வந்துவிட்டு, மீண்டும் தனது சொந்த ஊருக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.
கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே இருவரது மோட்டார் பைக்குகளும் வந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு பைக்குகளும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பலமாக மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த பயங்கர விபத்தில் அருண்பாண்டியன் மற்றும் சுப்புராஜ் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்த தகவலின் பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான அருண்பாண்டியன் மற்றும் சுப்புராஜ் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







