திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர் இடமாற்றம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடத்திய அதிரடி ஆய்வின் போது, அவரிடமே விரைவான கட்டண தரிசனத்துக்கு ரூ.4,000 வாங்கிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து கோவில் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்த அமைச்சர், பல்வேறு முறைகேடுகள் நடந்ததைக் கண்டுபிடித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இச்சம்பவத்தின் எதிரொலியாகத் திருச்செந்தூர் கோவில் உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனப் பரபரப்பு நிலவிய நிலையில், தற்போது முதற்கட்டமாக இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராகப் பணிபுரிந்து வந்த ராமு உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் இணை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் இணை ஆணையாளராகப் பணியாற்றி வந்த அருணாசலம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், திருச்செந்தூர் திருக்கோவிலில் உதவி ஆணையர் மற்றும் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த மெய்வேல், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உதவி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வந்த லோகநாதன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய உதவி ஆணையர் மற்றும் நேர்முக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.







