தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 75 பேர் திமுகவில் இணைந்தனர்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக, காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி அமைத்ததை விரும்பாமல் மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றன.

தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜன் மற்றும் முரளிதரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழ்ச்சியில், 40-வது வார்டு காங்கிரஸ் தலைவர் ஜோ. பர்னாந்து, மிக்கேல் ரெஜினா, ஈஸ்வரி, வழக்கறிஞர் பட்டுராஜா, சுரேஷ், சக்திவேல், ராஜ்குமார், முருகேசன், பிரேமா, கலா, மல்லிகா உட்பட 75 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
திமுகவில் இணைந்த அனைவரையும் வரவேற்றுப் பொன்னாடை போர்த்தி கீதாஜீவன், அவர்களுக்கு திமுக வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி வாழ்த்தினார்.
பின்னர் அவர் பேசுகையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்று இணைந்துள்ள உங்களை, வடக்கு மாவட்ட திமுக மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. வரும் காலங்களில் உங்களது பகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு உங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், கருணாநிதி, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அணித் தலைவர்கள் அருண்குமார், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், நாகராஜன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உன்பட பலர் கலந்து கொண்டனர்.







