கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் நடக்கும் விழாக்களில் பங்குனி பெருந்திருவிழா மிகவும் முக்கியமானதாகும்.
11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டு பங்குனி பெருந்திருவிழா இன்று (ஏப்ரல் 5) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலையில் நடை திறந்ததும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. விசேஷ பூஜைகளுக்கு பிறகு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கொடியேற்றப்பட்டது
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருமான கடம்பூர் ராஜு, நகர சபை தலைவரும் திமுக வேட்பாளருமான கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

15-ந் தேதி வரை நடக்கும் திருவிழாவில் தினமும் காலையும் மாலையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் மாலையில் சுவாமி- அம்மன் வீதி உலா நடக்கும். ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளி அருள் பாலிப்பர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 9வது நாள் தேரோட்டம்,10வது நாள் தீர்த்தவாரி, 11-வது நாள் தெப்பத் திருவிழா நடைபெறும்.இந்த மூன்று நாட்களும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்
திருவிழாவை முன்னிட்டு கோவில் மைதானத்தில் சிறுவர் மற்றும் பெரியோரை கவரும் பல்வேறு வகையான ராட்டினங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் விதவிதமான தின் பண்டங்களை ருசிக்க திடீர் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.







