மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு காவல் நீட்டிப்பு
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர், சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

கொலை நடந்து 9 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் இந்த வழக்கின் தீவிரத்தைக் கருதி, வெறும் 20 நாட்களிலேயே நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
தர்மமுனீஸ்வரனின் காவல் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் காணொலிக் காட்சி மூலம் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, தர்மமுனீஸ்வரனுக்கு ஏப்ரல் 16-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார்.








