ஓட்டப்பிடாரம் திமுக வேட்பாளர் ராமஜெயம்; 2 முறை வெற்றி பெற்ற சண்முகையாவுக்கு வாய்ப்பு மறுப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்(தனி )தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று எம்எல்ஏ எம்எல்ஏவாக இருந்தவர் எம்.சி. சண்முகையா.
நடைபெற இருக்கும் சட்டமன்றம் தொகுதியில் ஓட்ட ப்பிடாரம் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட விருப்பமனு அளித்து இருந்தார்.

ஆனால் இந்த முறை எம். சி. சண்முகையாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக திமுக சார்பில் போட்டியிட புதிய வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள ராமஜெயம் அறிவிக்கப்பட்டார்.
இதனால் எம். சி. சண்முகையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார், வீரன் சுந்தரலிங்கனார் உள்ளிட்ட பல்வேறு இந்திய விடுதலை போராட்ட வீரர்களை தந்த தொகுதியாக ஓட்டப்பிடாரம் விளங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சில வார்டுகள், ஓட்டப்பிடாரம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சில பகுதிகளை உள்ளடக்கியது.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அதிகளவில் இருப்பதால் இந்த தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஓட்டப்பிடாரம் ஆகும். இது பரப்பளவில் பெரிய சட்டமன்ற தொகுதியாக விளங்கி வருகிறது.
இங்கு பெரிய அளவில் நீர்பிடிப்பு பகுதிகள் இல்லாததால் மானாவாரி விவசாயம்தான் அதிக அளவில் நடக்கிறது. இந்த தொகுதியில் அமைந்து உள்ள புதியம்புத்தூரில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி அதிக அளவு நடந்து வருகிறது. இந்த தொகுதிக்குட்பட்ட தருவைகுளம் பகுதியில் மீனவர்கள் அதிகம் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதி தொடக்கத்தில் பொது தொகுதியாக இருந்தது. அப்போது 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1967 ஆம் ஆண்டு கடம்பூர் தொகுதி நீக்கப்பட்டு பெரும்பான்மையான பகுதிகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் சேர்க்கப்பட்டதால் தனித்தொகுதியாக மாற்றப்பட்டது.

இந்த தொகுதி 1962 முதல் இதுவரை 15 தேர்தல்களை சந்தித்து உள்ளது. இதில் 3 முறை காங்கிரஸ் கட்சியும், 4 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும் வெற்றி பெற்று உள்ளது. இதுதவிர இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சுதந்திரா கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி, ஜனதா கட்சி, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்டவை தலா ஒருமுறை வெற்றி பெற்று உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ் வெற்றி பெற்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் முதல் முறையாக போட்டியிட்ட சண்முகையா வெற்றி பெற்றார். தொடர்ந்து 2021 ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகையா தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
தற்போது சண்முகையாவின் ஆதரவு திமுகவினர் மற்றும் தொகுதி பொதுமக்கள் கூறுகையில்,”சண்முகையா மீண்டும் போட்டியிட்ட வாய்ப்பு வழங்க வேண்டும். அந்த வகையில் சண்முகையாவின் புதிய வேட்பாளர் அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.







