ரெயில் மீது கல் வீசினால் 10 ஆண்டு சிறை தண்டனை; தென்னக ரெயில்வே எச்சரிக்கை
Oplus_16908288
ஓடும் ரெயில்கள் மீது கல் வீசி பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :-
ரெயில் மீது கல் வீசுவது சட்டவிரோதச் செயலாகும். இது பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், ரெயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தையும், பொதுச்சொத்துகளுக்குச் சேதத்தையும் ஏற்படுத்துகிறது.

குறிப்பாக, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து உள்ளே இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குப் பலத்த காயங்களை உண்டாக்குகிறது.
ரெயில் மீது கல் வீசுவது ரெயில்வே சட்டம் 1989, பிரிவு 152-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்.
சென்னை கோட்டத்தின் முக்கியமான மற்றும் பதற்றமான பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீசார் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகளைக் கண்டறியக் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் நடந்தாலோ அல்லது கல் வீச்சு சம்பவங்கள் குறித்த தகவல் தெரிந்தாலோ, பொதுமக்கள் மற்றும் பயணிகள் உடனடியாக ரெயில்வே உதவி எண்ணான 139-ஐத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.







