• March 19, 2026

தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்; சீமான் வெளியிட்ட  தேர்தல் அறிக்கையில் தகவல் 

 தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்; சீமான் வெளியிட்ட  தேர்தல் அறிக்கையில் தகவல் 

Oplus_16908288

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மார்ச் 19 வெளியிட்டார். 

அதில்  பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. 

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், மாநிலத்தை 5 வெவ்வேறு தலைநகரங்களாகப் பிரித்துச் செயல்படுத்தப் போவதாகச் சீமான் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு :-

1. திருச்சி – முதன்மை நிர்வாகத் தலைநகரம்: தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி, மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரமாக மாற்றப்படும். தலைமைச் செயலகம், முதலமைச்சர் அலுவலகம், அமைச்சகங்கள் மற்றும் சட்டப்பேரவை ஆகியவை இங்கேயே செயல்படும். வட மற்றும் தென் மாவட்ட மக்கள் எளிதில் வந்து செல்லும் மையமாக இது அமையும்.

2. சென்னை – தொழில்நுட்பத் தலைநகரம்: சென்னை தனது நிர்வாகப் பளுவைக் குறைத்துக்கொண்டு, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக (Tech Capital) மாற்றப்படும். தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் ஏற்றுமதி, திரைக்கலை, ஊடகம் மற்றும் சர்வதேசக் கடல்சார் வணிகத்தின் நுழைவாயிலாகச் சென்னை திகழும்.

3. கோவை – தொழில் மற்றும் வணிகத் தலைநகரம்: மேற்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சியை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில், கோவை தொழில் மற்றும் வர்த்தகத் தலைநகரமாக (Industrial & Business Capital) அறிவிக்கப்படும். சிறு, குறு தொழில்கள் (MSME), நெசவுத் தொழில் மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி மையங்களின் தலைமையகமாக இது செயல்படும்.

4. மதுரை – மொழி மற்றும் பண்பாட்டுத் தலைநகரம்: தமிழின் தொன்மையான வரலாறு மற்றும் கலைகளைப் பாதுகாக்கும் வகையில், மதுரை பண்பாட்டுத் தலைநகரமாக (Cultural & Heritage Capital) விளங்கும். தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழ்ச் சங்கப் பணிகள் மற்றும் வரலாற்றுச் சுற்றுலா மேம்பாட்டிற்கான மையமாக இது செயல்படும்.

5. கன்னியாகுமரி – தமிழர் மெய்யியல் தலைநகரம்: தமிழகத்தின் தென்கோடியான குமரி, தமிழர் மெய்யியல் தலைநகரமாக (Epistemological Capital) அறிவிக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்சார் மேலாண்மை மற்றும் உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களை ஒருங்கிணைக்கும் மையமாக இது அமையும்.

தேர்தல் அறிக்கையின் மற்றொரு முக்கிய அம்சமாகப் பெண்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்துச் சீமான் பேசியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளைப் போலவே, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு எனத் தனித்தொகுதிகள் (Reserved Constituencies) உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தற்போதுள்ள முறையில் பெண் வேட்பாளர்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பட்டியலினத்தவருக்கு இருப்பது போன்ற தனித்தொகுதி முறை மூலமே அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் சமமான அரசியல் அதிகாரம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *